Meenakshi Amman Temple

Special supplement · Part 2 · page 44 · 89 / 159

மதுராவும் மதுரையும்

மதுரை என்பது ஆங்கிலத்தில் MADURA என எழுதப்பட்டு ‘மெஜூரா’ என்று நீண்ட காலமாக உச்சரிக்கப்பட்டது. இதில் ஒரு சிக்கல் உருவானது. மதுரைக்கு வரும் தபால்கள் உத்திரப்பிரதேசத்தில் உள்ள மதுரா (MATHURA) நகருக்கு தவறாக அனுப்பப்பட்டன. இதனால் பல பிரச்னைகள் ஏற்பட்டன. சுதந்திரத்திற்கு பிறகு இப்பிரச்சனை அப்போது பிரதமராக இருந்த நேரு அவர்களின் கவனத்திற்கு சென்றது. இது குறித்து மதுரை நகர சபைத்தலைவராக இருந்த திருமதி. டி.கே. ராமாவுக்கு கடிதம் ஒன்றை நேரு எழுதினார். MATHURAI என்னும் பெயரை சிறிது மாற்றும் படி அக்கடிதத்தில் கோரியிருந்தார். அன்றைய கல்லூரி முதல்வர்கள், பள்ளித்தலைமை ஆசிரியர்கள், கல்வியாளர்கள், முக்கியப்பிரமுகர்கள், அடங்கிய ஒரு கூட்டத்தை மதுரை நகர சபைத் தலைவர் கூட்டினார். அக்கூட்டத்தில் அன்றைய பிரதமரின் கோரிக்கை தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு MADHURAI மற்றும் MADURAI என இரண்டு பெயர்கள் தேர்வு செய்து இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. அரசினர் MADURAI என்பதை தேர்வு செய்தனர். இதுவே தற்போது வரை தொடர்கிறது. இப்படித்தான் MADURA என்பது MADURAI என மாற்றப்பட்டது.

Advertisement
Top
Advertisement