Special supplement · Part 2 · page 46 · 93 / 159
மங்காப்புகழ் பெற்ற மங்கம்மாள்
தமிழகத்தில் புகழ் பெற்ற பெண்ணரசியர் பலர் அவர்களுள், செம்பியன்மாதேவி, குந்தவை, வீரமாதேவி, மங்கையர்க்கரசியார் அனைவரும் பல ஆன்மிகப் பணிகளையும், அறக்கொடைகளையும் செய்து நிலைத்தவர்கள். இவர்களில் இருந்து வேறுபட்டு நேரடியாக அரசாட்சி நடத்தி மக்கள் உள்ளங்களை கவர்ந்த பேரரசிகள் ராணி மங்கம்மாள், வேலு நாச்சியார் என்ற இருவரும் பாண்டிய நாட்டை வலம் வந்தவர்கள். இவர்களில் ராணி மங்கம்மாளின் தர்மப்பணிகள் பற்றிய சில செய்திகள் இதோ... மங்கம்மாள் நாயக்கர் குல நங்கை. இவர் மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவியாவார். கணவர் இறந்தபின், இளம் வயதான தன் மகனுக்கும், பின்னர் பேரன் விஜயரங்க சொக்கநாதனுக்கும் துணையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். 1689 – 1706 வரை சார்பு அரசியாக மதுரையை ஆண்டு மங்காப்புகழ் பெற்றாள். மங்கம்மாள் பொறுப்பேற்ற அரசியல் சூழலில் வடக்கே அவுரங்கசிப்பின் ஆட்சி மேலோங்கியது. அவரை எதிர்த்த வீரசிவாஜியும் விண்ணுலகம் அடைந்தார். தென்னகத்து அரசர்கள் அடிபணிந்து வரி செலுத்தினர். அதற்கு மங்கம்மாளும் விதிவிலக்கல்ல. தன் சாமர்த்தியத்தால் அவுரங்கசிப்பின் உதவியைக் கொண்டே பக்கத்து நாட்டின் எதிரிகளை வென்றாள். தஞ்சை, உடையார்பாளையம் சிற்றரசர்கள் மதுரையின் சில பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். அவர்களை அவுரங்கசீப் படையின் மூலம் தன் நாட்டுப் பகுதிகளை மீட்டெடுத்தாள். மைசூர் சிக்கதேவராயன் படைகளையும் மண்டியிட வைத்தாள். வஞ்சகமாகத் தன்னை ஏமாற்றிய திருவிதாங்கூர் மன்னன் ரவிவர்மனைத் தன் தளபதி நரசப்பய்யரின் தலைமையில் படை நடத்தி வெற்றிகண்டாள். திருச்சி, தஞ்சைப் பகுதியில் பூவிரித்த சோலைகளைப் புரந்த காவிரியின் ஓட்டத்தை தடுத்து அணை கட்டினான் மைசூர் மன்னன் சிக்க தேவராயன். ராணிமங்கம்மாள் தஞ்சை மன்னர்களுடன் இணைந்து மைசூரானை வென்று அணை உடைக்கப் படை திரட்டினாள். அந்த நேரம் பெரும் மழை பெய்து அணை தானாகவே உடைந்தது. காவிரியும் பெருக்கெடுத்து சோழவளநாட்டை அடைந்தது. மைசூரானின் தலையும் தப்பினான். பிற மதங்களுக்கும் ஆதரவாக இருந்தாள் மங்கம்மா. தனது ஆட்சிக் காலத்தில் கன்னியாகுமரி வரை சாலைகளை அமைத்தும், பழைய பெருவழிகளைப் புதுப்பித்தும், மரக்கன்றுகளை நட்டும், குளங்கள், கிணறுகள் வெட்டித் தண்ணீர்ப் பந்தல் வைத்தும் சத்திரங்கள் கட்டியும் பல மக்கள் பணிகளைச் செய்தாள். பாண்டிய நாட்டின் பல சிற்றூர்களில் உள்ள சலைக்கு மங்கம்மாள் சாலை என்றே பெயர். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் முன்பாக உள்ள நகரா மண்டபம் மங்கம்மாளால் கட்டப்பட்டது. ஐந்து வேளையும் வழிபாடு நடைபெறும் போது இம்மண்டபத்தின் மீது வைக்கப்பட்டுள்ள நகரா (முரசு) என்னும் இசைக்கருவியை முழக்கி ஒலி எழுப்புவதற்காக இம்மண்டபம் கட்டப்பட்டது. இம்மண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ள தூணில் ராணிமங்கம்மாளும், அவளது பேரன் விஜயரங்க சொக்கநாதரும் நிற்பதாக உள்ள உருவச் சிற்பம் உள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலில் பொற்றாமரைக் குளத்தின் மேற்குக் கரையில் உள்ள ஒரு சிறு மண்டப விதானத்தில் அம்மனின் திருமணக்காட்சி, மங்கம்மாளின் உருவம் காணப்படுகிறது. இதில் மங்கம்மாளின் அருகில் விஜயரங்க சொக்கநாதனும் காட்டப்பட்டுள்ளார். இருவரது பெயர்களும் தமிழ், தெலுங்கு எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. எதிர்ப்புறம் திருமணக்காட்சியைக் காணும் மக்களிடையே தளபதி நரசப்பய்யரும் நிற்கிறார். சுமார் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியமாகும்.திருப்பரங்குன்றம் கோயிலில் முன் மண்டபம் ராணிமங்கம்மாள் அவர்களால் கட்டப்பட்ட தாகும். இம்மண்டபத்தின் மேற்கு வரிசைத்தூண் ஒன்றில் முருகன் தேவசேனையின் திருமணக் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இத்தூணின் எதிரில் உள்ள (கிழக்கு வரிசை) தூணில் ராணிமங்கம்மாள் தன் பேரனுடன் நின்று திருமணக் காட்சியைக் கண்டு வணங்குவது போலச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மதுரையிலுள்ள காந்தி அருங்காட்சியகம் உள்ள கட்டடம் மங்கம்மாள் காலத்தது என்பர். ராணி மங்கம்மாளின் நினைவைப் போற்றும் வகையில் மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் ஒரு சத்திரம் அவர் பெயரால் இயங்கி வருகிறது. அவர் தன் இறுதிக்காலத்தில் வாழ்ந்த அரண்மனை மீனாட்சி அம்மன் கோயிலின் அருகில் வட கிழக்கில் அமைந்துள்ளது.