Special supplement · Part 2 · page 46 · 94 / 159
தாத்தா பார்த்த கும்பாபிஷேகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 1877-ல் கும்பாபிஷேகம் நடந்தது. இது குறித்து தமிழ்த்தாத்தாவான உ.வே.சாமிநாத ஐயர் தனது நினைவுகளை ‘என் சரித்திரம்’ என்னும் நூலில் எழுதியுள்ளார். இதோ அச்செய்தி. அமராவதிபுதூர் வயிநாகரம் குடும்பத்தினர் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பணி செய்தார்கள். கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மதுரைக்கு அன்றைய தினம் வந்த ஜனக்கூட்டம் கணக்கில் அடங்காது. காசி முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள இடங்களில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் வந்திருந்தனர். திருவாவடுதுறை ஆதினத்தின் தலைவராக இருந்த மேலகரம் சுப்ரமணிய தேசிகர், சின்னப்பட்டம் நமச்சிவாய தேசிகர் ஆகியோரும் வந்திருந்தனர். நகரத்தில் எள் போட்டால் விழ இடமின்றி ஜனங்கள் நிறைந்திருந்தனர். கும்பாபிஷேகம் நடக்கும் போது கோயிலுக்குள் சென்றவர்களுக்கு இடம் கிடைப்பது அரிதாக இருந்தது. எனவே தக்கவர்களுக்கு மட்டும் சீட்டு அளித்து உள்ளே விட்டார்கள். அப்போது மதுரையில் கலெக்டராக க்ரோல் துரை இருந்தார். அந்த சமயத்தில் கோயிலைச் சுற்றியுள்ள மதிலுக்கு வெளியில் பல ஜனங்கள் குடிசைகள் கட்டிக் கொண்டு கோயிலைச் சுற்றி அசுத்தப்படுத்தினர். கோயில் கும்பாபிஷேகம் செய்வித்த வெங்கடாசலம் செட்டியார் என்பவர் அதுகண்டு மனம் வருத்தினார். நிவர்த்தி செய்ய முயன்று பார்த்தார். அவரால் இயலவில்லை. இதுகுறித்து மணி அய்யரிடம் தெரிவித்தார். அவர் மிக்க இரக்கமுடையவர். அவரிடம் செட்டியார், ‘திருமதில் சிவபெருமான் வடிவமாயிற்றே. அதைச் சுற்றி ஜனங்கள் அகத்தம் செய்கிறார்களே இதைக்காண எனக்கு மனம் பொறுக்கவில்லை. நீங்கள் இதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டும்’ என்று முறையிட்டு வந்தார். மணிஅய்யர் அவர் கூறுவதன் உண்மையையும், அவருடைய சிவ பக்தியையும் உணர்ந்தார். உடனே க்ரோல் துரையினுடைய உதவியைப் பெற்று மதில் புறத்தே இருந்தவர்களுக்கு வேறு இடங்கள் வாங்கித் தந்தும், வீடு கட்ட பண உதவியும், நிலத்திற்கு விலை தந்தும் அவர்களை திருப்தி செய்வித்தார். பின்னர் வசதியான இடங்களில் அவர்களை குடியேற்றி பாதுகாத்தார். பின்னர் திருமதிலைச் சுற்றி நந்தவனம் அமைத்து இரும்பு வேலி போடச் செய்தார்.