சுயம்புப்புற்று அம்மன், அங்காள பரமேஸ்வரி, பெரியாயி மண்டபம், தண்டேஸ்வரர், பாலகணபதி, பாலமுருகன் என்று ஏராளமான கடவுள் சன்னதிகளோடு அற்புதமாக எழும்பிவருகிறது கோயில்.
பிரார்த்தனை
தன்னை தரிசிக்க பயபக்தியுடன் வரும் பக்தர்களுக்கு, தடைகள், தீவினைகள், நோய்கள் என அனைத்தையும் நீக்கி மங்கள வாழ்வளிக்கிறாள் அங்காள பரமேஸ்வரி.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு பால் அபிஷேகம், அர்ச்சனை செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தல வரலாறு:
ஒருநாள் விடியற்காலை நேரம், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் அந்த அம்மன் பக்தை. அம்மா... பசிக்குதும்மா....! நான் வந்து ரொம்ப நாளாச்சு.. பசியோடு வெட்டவெளியிலே காத்துகிட்டு இருக்கேன். கொஞ்சம் அன்னம் கொடும்மா! கெஞ்சலாக, கொஞ்சலாகக் கேட்ட, சின்னஞ்சிறுமியின் குரல் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தாள் அந்த பக்தை. அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது., தான் கண்டது கனவு என்று. அதிகாலைக் கனவு என்பதால் அசட்டை செய்ய மனம் இன்றி, ஜோதிடர்களை அழைத்து விவரம் கேட்டாள். கனவில் வந்தது யாரோ ஒரு அம்மன் என்றும்; தனக்குக் கோயில் கட்டி நிவேதனம் செய்யும்படி கேட்டிருக்கிறாள் எனவும் சொன்னார்கள் ஜோதிடர்கள். தன்னிடம் அம்மன் கோயில் கட்டும்படி கேட்டாளா? தனக்கு அந்த பாக்கியம் இருக்கிறதா? சந்தேகத்துடன் இருந்த பக்தை. யாரோ சொன்னதன்பேரில் வைத்தீஸ்வரன் கோயில் சென்று நாடி ஜோதிடம் பார்த்தாள்.
என்ன ஆச்சரியம் கோயில் கட்டும் பாக்கியம் அவளுக்கு இருக்கிறது என்பதோடு, அவளுக்குச் சொந்தமான இடத்தில் அம்மன் சுயம்புவாகத் தோன்றியிருக்கிறாள் என்றும் சொல்லியிருந்தது நாடிக் குறிப்பில். அவசரம் அவசரமாக வீடுதிரும்பிய பக்தை. தனக்குச் சொந்தமான நிலத்தில் வலம் வந்தாள். அம்மன் வடிவினைத் தேடினாள். அங்கே அவள் கண்ட காட்சி அவளைச் சிலிக்கச் செய்தது. புற்றுருவாக தானே தோன்றிய திருவடிவாக அங்கே காட்சிதந்தாள் அம்பிகை. உடுக்கை, பம்பைகள் ஓங்கி ஒலிக்க, ஓங்காரி, ஆங்காரி, ரீங்காரி என ஆர்ப்பித்து மந்திரம் சொல்லிக் குறிகேட்டவர்கள் சொன்னார்கள். இந்த அம்மன், அங்காள பரமேஸ்வரி மேல்மலையனூராளின் அம்சமே இவள். சுயம்பு அங்காள பரமேஸ்வரி என்று பெயரிட்டு கோயில் கட்டு, அதோடு கோயிலில் நித்ய வாசம் செய்யப் போகிற நாகவல்லிக்கும் பூஜைகள் செய்..! அப்படியே கோயில் கட்டத் தொடங்கி விட்டார் அந்த பக்தை.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு சுயம்பு புற்று அம்மன் அருள்பாலிப்பது சிறப்பு.