இக்கோயில் இரண்டு வாசல்களுடன் அமைந்திருக்கிறது.கன்னி விநாயகர், சந்திரன், சூரியன், சொக்கநாதர், மீனாட்சியம்மன், சனீஸ்வரர், பைரவர் சன்னதிகள் உள்ளன. இங்குள்ள முருகனை வலதுபுறம் திரும்பிய மயில் வாகனத்துடன் காணலாம். இக்கோயிலை பாண்டியன் குலசேகரன் அல்லது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர் கட்டியிருக்கலாம் என்பதற்கு சாட்சியாக மதுரை சொக்கநாதருக்கும், மீனாட்சி அம்மைக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிரார்த்தனை
செல்வம் பெருக இங்குள்ள குபேரரை வழிபட்டுச் செல்கின்றனர்.
தேவியருடன் குபேரன்: கருவறையின் மேலுள்ள விமானத்தில் யானை மீது அமர்ந்திருக்கும் குபேரனின் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு தேவியர் அவருடன் இருக்கின்றனர். தேவியருடன் யானை மீது அமர்ந்திருக்கும் குபேரனை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும். கருவறையில் கைலாசநாதர், சுக்கிர அம்சத்துடன் காட்சி தருகிறார். அம்பாள் அழகிய பொன்னம்மையின் பெயரிலேயே பொன் இருக்கிறது. இவள் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். விமானத்திலுள்ள குபேரரை வணங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில், சுக்கிரன் அனுகூலமாக இல்லாதவர்கள், நவக்கிரக மண்டபத்திலுள்ள சுக்கிரனுக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி, மொச்சைப்பொடி சாதம், தயிர்ச்சாதம் நைவேத்யம் படைத்து, வெண்தாமரை மலர் படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரை நேரத்தில் (காலை 6-7) இவரை வழிபடுவது விசேஷம்.
தீர்த்த சிறப்பு: தாமிரபரணி இத்தலத்தின் தீர்த்தம். நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசத்தில், பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி, இவ்வூர் அருகிலுள்ள புன்னக்காயல் கடலில் சங்கமிக்கிறது. தை மற்றும் ஆடி அமாவாசையில் சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது.
தல வரலாறு:
கைலாயத்தில் சிவபார்வதி திருமணம் நடந்த போது, உலகை சமப்படுத்த அகத்தியர் பொதிகை மலைக்கு வந்தார். அவரது சீடரான உரோமச ரிஷிக்கு தாமிரபரணிக் கரையின் பல இடங்களில் சிவலிங்கம் அமைக்கும் எண்ணம் எழுந்தது. அகத்தியரின் ஆலேசனைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அவை ஒதுங்கிய இடங்களில் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிற்காலத்தில், அவ்விடங்களில் கோயில்கள் எழுந்தன. ஒன்பதாவது மலர் கரை ஒதுங்கிய தலம் சேர்ந்தபூமங்கலம்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:நவகைலாயங்களில் இது சுக்கிரனுக்குரிய தலமாகும்.
இருப்பிடம் : திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ.,தூரத்தில் ஆத்தூர். அங்கிருந்து புன்னக்காயல் பஸ்களில் 3 கி.மீ., தூரத்தில் சேர்ந்தபூ மங்கலம். ஆத்தூரில் இருந்து ஆட்டோ உண்டு.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருநெல்வேலி
அருகிலுள்ள விமான நிலையம் :
தூத்துக்குடி, திருவனந்தபுரம்