ஆண்டவருக்குத் துணையாக சடையப்பர், கொங்கனி, கருப்பு, முத்துக்கருப்பு, தூண்டில் வீரன், மதுரை வீரன், முனியப்பர் என ஏவல் தெய்வங்கள் உள்ளன.
பிரார்த்தனை
பில்லி, சூன்யம் விலக, திருடுபோன பொருட்கள் மீண்டும் கிடைக்க, பேய் பிசாசுகளிலிருந்து விடுபட, மனநலம் பாதித்தவர்கள் தெளிய என பலவிதமான பிரச்சனைகளுக்கு இங்கு வந்து வேண்டிச்செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
ஆடு, கோழி பலியிடல், சாமிகளுக்கு குதிரை வாகனம் செய்து வைப்பது என விதவிதமான முறையில் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
ஆண்டவரை நம்பி வருவோரை நிச்சயம் காப்பாற்றுவார். இப்படி பிரபலமான இந்த ஆண்டவர் கோயில் திரைப்பட படப்பிடிப்புத் தலமாகவும் மாறியுள்ளது. இந்த தெய்வத்தை யாரும் அவமரியாதைப்படுத்தினால் பொறுத்துக் கொள்ள மாட்டார். இன்றளவும் ஊரில் யாரும் கட்டில் போட்டுப் படுப்பதில்லை. அப்படி யாராவது கட்டிலில் படுத்துத் தூங்கினால், இரவில் வேட்டைக்குப் போகும்போது தூங்கும் ஆளோடு சேர்த்துக் கட்டிலை கவிழ்த்து விட்டுப் போவார். இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன.
தல வரலாறு:
பல நூற்றாண்டுக்கு முன்பு கொல்லிமலையிலிருந்து தனது படை, பரிவாரங்களோடு வேட்டைக்குப் புறப்பட்ட ஆண்டவர், வேட்டை முடிந்து திரும்பும் போது பொயனப்பாடி என்ற இடத்தில் விடிந்துவிட்டது. கள்ளிக்காடாக இருந்த அந்த இடம் பிடித்துப் போனதால், அங்கேயே ஆண்டவர் குடிகொண்டுவிட்டார். பல காலம் சாமி அங்கு இருந்ததே யார் கண்ணுக்கும் தெரியவில்லை. இந்த நிலையில், கன்று ஈன்ற பசு ஒன்று தினசரி மடிசுரந்து பாலோடு கள்ளிக்காட்டுக்குள்ளே போகும். திரும்பி வரும்போது பசுவின் மடி வற்றிப்போயிருக்கும். ஒரு நாள் பசுவின் சொந்தக்காரர் மறைந்து சென்று பார்த்த போது, பசு ஓரிடத்தில் தானாகப் பால் சுரப்பதையும், அது உடனே பூமிக்குள் உறிஞ்சப்படுவதையும் கண்டார். இந்த அதிசயத்தை அவர் ஊரில் போய்ச் சொல்ல, ஊர் பெரியவர்கள் வந்து பார்த்தனர். பிறகு அந்த இடத்தை தோண்டச் சொன்னார்கள். அங்கே ஆண்டவர் துணைவியார் செல்லியம்மனோடு சிலை வடிவில் இருப்பதைக் கண்டு வியந்து, அதே இடத்தில் கொட்டகை போட்டு வழிபட்டு வந்தனர். இவ்வாறு ஆண்டவர் தோன்றிய செய்தியைக் கேள்விப்பட்டு பல இடங்களில் இருந்தும் மக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலவருக்கென தனித்திருநாமம் எதுவும் இல்லாமல் ஆண்டவர் என்பதே திருநாமம் ஆனது சிறப்பு.
இருப்பிடம் : கடலூர் மாவட்டம், சேலம் - கடலூர் சாலையில், வேப்பூருக்கும் மேற்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அடரி. அங்கிருந்து இடப்புறமாக ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பொயனப்பாடி ஆண்டவர் திருக்கோயில்.