பவுர்ணமி தோறும் நிலவொளி மூலவரின் மீது படுவது சிறப்பு. உடலில் உள்ள வெப்பநோயை போக்கும் தலம். வைத்தீட்வரராகவும், மருந்தீட்சரராகவும் இருந்து அருள்புரிகிறார். திருஅதிகையில் முப்புரம் அழித்து அம்மை அப்பர் இருவரும் ஓய்வெடுத்த சிறந்த மூலிகைகள் கலந்த பூந்தோட்ட வனமான இங்கு ஓய்வெடுத்து உடல்வெப்பத்தை போக்கிக் கொண்ட நதியும், குளுமையைப் போக்கி கொண்ட பூந்தோட்டமான திருக்கோயிலும் ஆகும். வெப்ப நோயை நோக்கி ஆரோக்கியம் தந்த தலம். இறைவனுக்கே உரிய அற்புதத் திருத்தலமாகும்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
கருவறைக்குள் மிக பிரம்மாண்டமான ஈசன். ஒற்றை ஆடையில் எவ்வித அலங்காரமும் இன்றி அமர்ந்திருக்கும் கோலத்தில் உள்ளார். அர்த்த மண்டபத்தில் ஒரு திரிசூல கல்வெட்டுடன் பெரியவர் கண்ணன் சுவாமிகளின் புகைப்படம் உள்ளன. இக்கோயில் ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருந்தாலும், இங்கு கிடைக்கப்பட்ட கல்வெட்டு சற்று பிற்காலத்தியது. 14 ம் நூற்றாண்டில் ஆறாம் மாறவர்ம விக்கிரம பாண்டியரின் அமைச்சராக இருந்த அபிமான துங்க பல்லவராயர் இக்கோயிலுக்குச் செய்த திருப்பணிகள் குறித்த கல்வெட்டாகும்.
கோயிலின் நிலை: ஒரு காலத்தில் மிக பிரம்மாண்டமாக விளங்கி இருந்திருக்கும் நதி. அதன் நீளமும் அகலமும் இப்பொழுதும் பிரமிக்க வைக்கின்றது. இன்று நீரின்றி புதர் மண்டி பரிதாபமாகக் காட்சி அளிக்கின்றது. சுற்றிலும் இயற்கையின் பாழ் கோலம் நதி மட்டுமல்ல; ஒரு காலத்தில் மிகப்பெரும் கோயிலாக இருந்திருக்கூடிய கோயில் இன்று ஒற்றை சன்னிதியுடன் பாழடைந்து கிடக்கிறது. ஒரு பிரம்மாண்டமான ஆவுடையார் தரையில் சாய்ந்து கிடக்கிறது. உடைந்த கூரையின் கீழ் ஒரு சிலை, வானம் பார்த்த விநாயகரும் நந்தியும் உள்ளன. மேலும் பல ஆண்டுகள் உருண்டோடின. அன்னியர் படையெடுப்பில் அறந்தாங்கி நல்லூர் உருத் தெரியாமல் போயிற்று. வீடுகளும் மாளிகைகளும் தரைமட்டம் ஆயின. கோயிலும் பெருமளவில் பழுதுபட்டது. எஞ்சி இருந்த மக்களும் புலம் பெயர்ந்து செல்ல, நரிகள் மட்டுமே மிஞ்சிய நரிமேடு ஆனது இவ்வூர். இன்றும் வெறும் ஐம்பது வீடுகளையே கொண்ட சிற்றூராக விளங்குகிறது.
மேற்கண்ட இந்த மரபுச்செவிவழிச் செய்திகள் உண்மைதான் என்பது போன்ற சுவடுகளைக் காட்டுவது போன்று கி.பி. 6-ஆம் மற்றும் 7-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் இங்கு காணப்படுகின்றன. இவை இங்கு காணப்படும் தொன்மைத் தடயங்கள் சிற்பங்கள், கருங்கற்கள் மூலம் அறியப்படுகின்றன. பின்னர் அரசு புரிந்த சேர, சோழர், பாண்டியர் மற்றும் விஜய நகர மன்னர்களின் காலங்கள் வரை அதாவது 200 ஆண்டுகள் வரை போற்றி வணங்கப்பட்டு வந்த இக்கோயில், காலப்போக்கில், தோற்றமும் மறைவும் உலகநியதி எனும் நிகழ்வுகளுக்கேற்ப இக்கோயில் தோற்றமும், வளர்ச்சியும் பெற்று அந்நிய நாட்டவரின் படையெடுப்பால் அழிந்து போயிற்று. இவ்வூரின் அழிவிற்குப் பின்னர் இப்பகுதியில் இருந்த வீதிகளும், மாடமாளிகைகளும் மறைந்து மண் மேடிட்டு மேடாக மாறி மொத்தம் ஏழுமேடுகள் இருந்ததாகவும் அங்கு ஊளையிடும் நரிகளின் இருப்பிடமாக மாறியதால் ஏழுமேடு, எழுமேடாகவும், நரிகளின் வாழ்விடங்களாக இருந்ததால் பின்னாட்களில் பெரியநரிமேடு, சின்னநரிமேடு எனப் பெயர் மாற்றம் பெற்றன. சின்ன நரிமேட்டில் ஒரு சில வாழ்விடங்கள் பெருகி இருந்ததால் பெரியநரிமேடு என்றும் அழைத்தனர்.
மற்றோர் பகுதியில் துறவிகளும், முனிவர்களும் வந்து தங்கி, தென்கங்காபுரீட்வரரை வணங்கி வேள்விகள் செய்து வாழ்ந்ததால் சன்னியாசிப்பேட்டை எனவும் பெயர் பெற்றது. 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு இருந்த ஊரும், கோயிலும் அழிவுற்ற பிறகு மக்கள் தங்களின் வாழ்விடங்களை வெவ்வேறு பகுதிகளுக்கு மாற்றிக் கொண்டனர் என்பதை இங்கு காணப்படும் வரலாற்றுத் தடயங்களைக் கொண்டு ஆய்வு செய்து அறியப்பட்டுள்ளது.
சின்ன நரிமேடு தல அமைப்பும்- தலசிறப்பும்: இங்குள்ள மகாகணபதி அமர்ந்த கோலத்தில் மூஷிகவாகனத்துடன் தனி சன்னிதியில், அருளுகிறார். இங்கு பலிபீடம் உள்ளது. விமானம் சிறிய அமைப்பில் உள்ளது. விமானத்தில் கலசம் உள்ளது. கிழக்கு நோக்கிய சன்னிதி. கோபுரம் இல்லை. அம்பாள் சன்னிதானம் உள்ளது, கலசம் இல்லை. தென்கங்காபுரீட்சுவரர். அனைத்து சீவராசிகளையும் அருளுகிறார். (ஆவுடையார் அகண்டும், பாணம் சிறுத்து மெலிந்தும் உள்ளது.) மாசிலாம்பிகை, பெரியநாயகி, பிரகண்நாயகி கிழக்கு நோக்கி அனைத்து உயிர்களையும் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். நந்திதேவர் மேற்கு நோக்கிய நிலையில் சுவாமியின் அருள் பார்வையில் அமர்ந்து அருளுகிறார். பலிபீடம் உள்ளது.
பாலமுருகன்: அருள்மிகு பாலமுருகன் நின்ற கோலத்தில் அருளுகிறார். தட்சிணாமூர்த்தி: அருள்மிகு குரு தட்சிணாமூர்த்தி குருஅருள் வழங்குகிறார். குளம்: திருக்குளம்- கங்கா தீர்த்தம் தலநதி: கெடிலநதி உள்ளன.
பெரிய நரிமேடு பரிவாரத் தெய்வங்கள்: ஊரின் முகப்பில் சிகைக்காய்களைப் போல் சடைச்சடையாக கருத்தபழுத்த பழங்கள்: மஞ்சளும், இளஞ்சிகப்பு, இளம்பச்சை வண்ணங்களில் சடைச்சடையாக கொத்து கொத்தாக பழங்கள் கருப்பு நிறத்தில் காய்த்து பழுத்து தொங்குகிறது. இம்மரத்தை தூங்குமூஞ்சி, யானைக்கால், யானைச்சுருட்டி என்று பல்வேறு பெயர்களால் வழங்குகிறார்கள். இம்மரம் அழகும், கம்பீரமும் கொண்டு இவ்வூருக்கு அழகு சேர்க்கிறது. ஊரின் உள்புறம் வருவோரை வரவேற்கும் விருட்சமாக உள்ளது. இங்கு முத்துமாரியம்மன் அருளுகிறாள். நவகிரகசன்னிதி: அருள்மிகு நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கிறார்கள். செல்வவிநாயகர் சன்னிதி, செல்வவிநாயகர், சுப்பிரமணியர் சன்னிதி, சுப்பிரமணியர், பாலகணபதி சன்னிதி, பாலமுருகன் போன்ற தெய்வங்கள் அருள்பாலிக்கிறார்கள். மேலும், காசிவிஸ்வநாதர், காசிவிசாலாட்சி அருள்புரிகிறார்கள். ஊரில் வெளியேறும் பாதையில் அருள்மிகு ஐயனார் தனிச்சன்னிதியில் பொற்கிலை- பூரணி சமேத திருகாட்சி தருகிறார். வயல்வெளிகளின் எல்லைமுகப்பில் வெட்டவெளியில் கோயில் உள்ளது. பித்தளை சூலத்தினுள் முனேஸ்வரர் கிழக்கு நோக்கிய சன்னிதி. தாடி மீசையுடன் அமர்ந்த நிலையில் உள்ளார். தென்திசை நோக்கிய ஐயனார் முனேசுவரரை எதிர்கொண்டு உள்ளார்.பெரியநரிமேடு: 600 மக்கள் தொகை கொண்ட கிராமம். ஊரில் ஆறு வீதிகள் உள்ளன. சின்னநரிமேடு: 80 வீடுகள் (400 மக்கள் தொகை) கொண்ட ஊர். ஒரே ஒரு வீதி மட்டும் உள்ளது.
சின்ன நரிமேடு திருக்கோயில் அமைப்பு: ஊரின் முகப்பின் மெயின்ரோட்டிலிருந்து இறங்கியவுடன் கிழக்கு முகப்பு திசையில் சோதிடப் பண்டிதர்கள் குழுமிய (ஊரின் சிறிய வீதியில்) குடும்பங்கள் உள்ளன. அம்பாள் கோயில் உள்ளது. ஊரின் முகப்பில் 50 மீட்டர் தென்திசை நோக்கி, மேற்கு திசையில் மேட்டுப்பகுதியில் இருந்து மகா அகண்ட திருக்குளம் உள்ளது. தென்திசை மேட்டுப்பகுதியில் தண்ணீர்தொட்டி உள்ளது. அதை ஒட்டிய நிலையில் பெரிய சிமெண்ட்டால் ஆன களம் உள்ளது. விவசாயத்திற்கும், திருக்கோயிலுக்கும் இம்மகா களத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். திருக்கோயில் முன்பு கிழக்குதிசையில் ஓர் சுவாமி உள்ளது. கிழக்கு நோக்கிய நிலையில் அருளுகிறார். எட்டுத்திக்கும் நான்கு திசைகளிலும் பச்சைக் கம்பளம் விரித்தார் போன்று மிக மிக கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கண்ணுக்கு புத்தொலி வழங்கும் பசுமைக் காட்சிகள். மையப் பகுதியில் எம்பெருமான் திருக்கோயில். திருக்கோயில் சிறிய விமானத்தின் கீழ் (கருவறையில்) சுவாமி உள்ளார். மகா (பெரிய) சிவலிங்கத் திருமேனி, ஆவுடையார் பெரியதாகவும், பாணம் சிறிய கூம்பு வடிவத்திலும் உள்ளார்.
நூறு ஆண்டுகளைக் கடந்து வள்ளுவ பண்டார இனத்தைச் சார்ந்த சந்ததியினர் 17 குடும்பங்களாக 90 தொகை உள்ள குடும்பமாக ஓர் சிறிய வீதியில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் சோதிடத்தை மூலாதாரமாகக் கொண்டு வழி வழியாக வாழ்ந்து வருகிறார்கள்.
பிரார்த்தனை
உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்க இங்கு பிரார்த்தனை செய்யலாம்.
நேர்த்திக்கடன்:
சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்யலாம்.
தலபெருமை:
பல்லவ மன்னர்களின் ஆட்சிக்கு முன்பிலிருந்தே (2000 ஆண்டுகளுக்கு முன்பு) திருப்பாதிரிப்புலியூருக்கும், திருவதிகைக்கும் பெருவழிச்சாலை இக்கோயிலை ஒட்டியே அமைந்திருந்தது. சோழ மன்னர்களின் ஆட்சிக்காலங்களில் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப் பெற்றிருந்த இக்கோயிலை பின்வந்த பாண்டிய மன்னர்களும், நன்கு பராமரித்துப் போற்றி வந்தனர் என்பதை இப்பகுதியில் காணப்படும் பாண்டியர் காலக் கல்வெட்டு மூலம் அறியப்பட்டுள்ளது. திருச்சுற்றுடன் பெரியகோயிலாக இருந்த இக்கோயில் சிதைந்து அழிவுற்ற பிறகு, இங்கிருந்த கடவுளர் சிலைகளும், சிற்பங்களும், கருங்கற்தூண்களும் மக்களால் பற்பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வழிபடப்பட்டன. அதுபோன்ற எடுத்துச் செல்லப்பட்ட கற்களில் பொறிக்கப்பட்டுள்ள பாண்டியர் காலக்கல்வெட்டு ஒன்றில் காணப்படும் செய்தி. இந்த வரலாற்றுஉண்மையை நமக்குத் தெரிவிக்கிறது. ஓர் பலகைக் கல்லில் முன்னும் பின்னுமாக இரண்டு புறங்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முன் பகுதியின் நடுவில் திரிசூலம் வடிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டில் உள்ள வரிகள்: ஸ்வஸ்திஸ்ரீ எழுமேட்டில் உடையார் மன்றில் குனிக்கும் பெருமாள் திருநாமத்துக்காணிக்கு எல்லை தென்பார்க்கெல்லைக்கு இடைநாழி எல்லைக்கு வடக்கும் மேல்பார்க்கெல்லை இந்நாயனார் திருவாசலுக்கு மேற்கு போகிற தெருவுக்கும், கெடிலக்காலுக்கு கிழக்கும், வடபார்க்கெல்லை கெடிலத்துக்கு தெற்கு, கீழ்ப்பார்க்கெல்லை அறந்தாங்கிநல்லூர் எல்லைக்கு மேற்கு உள்பட நிலத்து நஞ்சை புஞ்சை திருமடை வளாகம். அந்தராயம் இறையும் முதல்வாங்க இறையிலி திருநாமத்துக்காணி சிமா தென்கங்கை என்று காணப்படுகிறது. கல்வெட்டின் விளக்கம்: பாண்டியர் ஆட்சிக்காலத்தில் எழுமேடு என்று கூறப்படுகின்ற பகுதியில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் திருக்கோயிலுக்கு இறையிலி எனப்படும் கோயிலுக்குரிய நிலமாக பதிவு செய்யப்பட்டது. இந்நிலங்களின் எல்லைகளைக் கூறும்போது தெற்கில் இடைநாழி எனும் பெயர் கொண்ட எல்லைக்கு வடக்கிலும், மேற்கிலும் இக்கோயில் வாசலுக்கு மேற்கில் செல்லும் வீதிக்கும், கெடில ஆற்றிலிருந்து நீர்கொண்டு செல்லப்படும் வாய்க்காலுக்குக் கிழக்கிலும், தெற்கில் கெடிலநதிக்கு கிழக்கில் முடியும் அறந்தாங்கிநல்லூர் எல்லைக்கு மேற்கிலும் எல்லைகளாகக் கொண்ட நன்செய், புன்செய் நிலம் அனைத்தும், அதாவது இக்கோயில் அமைந்திருந்த நான்கு எல்லைப் பகுதிகளிலும் சுற்றியிருந்த கோயிலுக்குரிய நிலமாக பதிவு செய்யப்பட்டது என்கிற செய்தியை இக்கல்வெட்டு மூலம் அறியப்படுகிறது. மேலும் இப்பகுதியில் செக்காடுவோர் மூலம் பெறப்பட்ட அரசு வரிகள் மற்றும் பற்பல தொழில்வரிகள் உட்பட அனைத்து வரிப்பணத்தையும் கோயில் நிர்வாகச் செலவுகளுக்கு அளிக்கப்பட்டதாக இக்கல்வெட்டு மூலம் அறியப்படுகிறது.
மேற்கண்ட தானங்களை நிறைவேற்றியவர் அபிமான துங்கப் பல்லவராயர் என்பவராவார். இவருக்கு மன்றில் குனிக்கும் பெருமாள் என்கிற சிறப்பு விருதுப் பெயரும் உண்டு. இவர் கி.பி. 14-ம் நூற்றாண்டில் ஆறாம் மாறவர்ம விக்கிரம பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் இப்பகுதியின் அமைச்சராக பணியாற்றியவர். இப்பாண்டியரின் ஆட்சி அதிகாரம் திருமுனைப்பாடி நாட்டில் கி.பி. 1337-ல் இருந்து 1343 வரை இருந்தது. அப்போது இந்த அபிமானதுங்கப் பல்லவராயரின் பெயரால் பல்லவராயநத்தம் என்கிற ஊர் உருவாக்கப்பட்டது. இக்கோயிலில் இருந்து கிழக்கே 1 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. மேலும் இவரது இறைப்பணிகளைக் கூறும் கல்வெட்டுகள் திருமுனைப்பாடி நாட்டில் திருவதிகை, திருவந்திபுரம், திருக்கண்டேசுவரம் போன்ற பற்பல ஊர்களில் காணப்படுகின்றன.
பல நூற்றாண்டுகளாக பல்வேறு மன்னர்களாலும், அரசு அதிகாரிகளாலும், முனிவர்களாலும், துறவிகளாலும் போற்றிப் பூசிக்கப்பட்டு வேத மந்திரங்களாலும் யாகக் குண்டங்களின் நறுமணப் புகையாலும் சூழப்பட்டு மிக உன்னதமான புகழினைப் பெற்றிருந்த இக்கோயிலின் இன்றைய நிலை, கால மாற்றங்களாலும், வேற்று மதத்தவர் படையெடுப்பாலும், இதன் பெருமையை அறியாதவர்களாளும் நான்குமாட வீதிகளை இழந்து சுற்றிச் சூழ்ந்திருந்த மக்களின் வாழ்விடங்களை இழந்து அறந்தாங்கிநல்லூர் என்ற அழகிய பெயரினையும் இழந்திருந்தாலும், இன்றைக்கும் கருவறை விமானத்துடன் இக்கோயில் எஞ்சி நிற்கிறது என்றால் இதற்கு இறையருளும் மக்களின் இறையுணர்வுமே காரணம்.
தல வரலாறு:
நரிமேடு, எழுமேடு பகுதிகளின் தெற்கே உள்ள கெடில நதியை தென்கங்கை என திருநாவுக்கரசுப் பெருமான் தாம் பாடிய திருவதிகை வீரட்டானத் தேவாரப்பதிகங்களில் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பின்படி ஓர் புராண வரலாறு இப்பகுதிக்கு உண்டு.
கங்கை நதி: கங்கை சொர்க்கத்தில் மந்தாகினி எனவும்; பூமியில் கங்கை எனவும், பாதாளத்தில் போகவதி எனவும் பெயர் பெற்றவள். இவள் உலகிலுள்ள மூன்றரைக்கோடி தீர்த்தங்களுக்கு உண்டான பலன்களை கொடுக்கக்கூடிய புனிதமானவள் என்பதை புராணங்கள் வழியே அறிகிறோம். இவள் பகீரதச் சக்கரவர்த்தியின் தவத்தாலும், சிவபெருமானின் திருவருளாலும் ஏழுதுளிகளாய் பூமியில் விழுந்து ஆறாகப் பெருக்கியவள் என்றும். உமையவள் தமது திருக்கரங்களால் விளையாட்டுக்காகச் சிவபெருமானின் கண்களை மூடியபோது அம்மையின் கரங்கள் வழியே பெருகிய நீர் வெள்ளமாகப் பெருகிவர, அதைச் சிவபெருமான் தன் சடைமுடியில் தரித்தார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. மேலும் கங்கையானவள் சிவபெருமானை மணக்க விரும்பியதை உமையவள் குறிப்பால் உணர்ந்து இரேணு என்பவனுக்கு மகளாகப் பிறக்க சாபமிட்டார். அந்த சாபத்தின் கோபத்தால் அமங்கலம் பெற்றதாகவும், பின்பு கங்கையானவள் உமையவளைக் குறித்து செய்த தவப்பயனால் மங்கலம் பெற்றாள் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
கங்கையைப் பற்றி இதுபோன்ற பற்பல புராணங்கள் கூறப்பட்டாலும், திருஅதிகையில் சிவபெருமான் முப்புர அசுரர்களின் கோட்டைகளை முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எரித்துச் சாம்பலாக்கியபின் சிவபெருமானும், உமையவளும் தனிமையில் ஓய்வெடுக்க விரும்பி கெடில நதியைப் படைத்து அதில் குளித்து மேனியைக் குளிர்வித்தார்கள் எனவும், இவ்வாறு நீராடும் போது சிவபெருமானின் சடைமுடியில் இருந்த கங்கையானவள் கெடில நதியில் கலந்ததால் இந்நதி தென்கங்கை பெயர் பெற்றது எனவும், அதன்பிறகு நரிமேடு-எழுமேடு எனும் பகுதி அக்காலத்தில் அபூர்வமான மூலிகைகள் நிறைந்த பசுஞ்சோலையாக இருந்தால் தங்களது உடல் வெப்பத்தைத் தணிக்க இங்கு எழுந்தருளி ஓய்வெடுத்தனர் என்றும் இப்பகுதி மூத்தகுடிமக்களால் வழிவழியாக கூறப்பட்டு வந்த செவிவழிச் செய்தியாகும். எனவே வெப்பத்தின் மூலம் நம் உடலில் உண்டாகின்ற நோய்கள் பலவும் இங்கு எழுந்தருளிய அம்மை அப்பனை வழிபடப்பெற்ற திருத்தலமாக இக்கோயில் சிறந்து விளங்கி இருந்தது என்பதும் மரபு வழிச் செய்தியாகும். இந்த புராணத்தை அறிந்த வெம்மை நோயுற்ற மன்னர் ஒருவர் பிற்காலத்தில் அந்த நந்தவனப் பகுதிக்கு மூலிகைகளைப் பறிக்க அரண்மனை வைத்தியருடன் வந்தபோது, தாம் தேடி வந்த மூலிகைச் செடிகளின் புதரின்கீழ் சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டு வணங்கி அந்த இடத்தில் கோயில் எழுப்பி, கெடில நதியில் இருந்து வாய்க்கால் வழியாக நீரைக்கொண்டு வந்து திருக்குளம் அமைத்து குடமுழுக்குத் திருப்பணியைச் செய்து தென்கங்காபுரீச்சுவரர் என்று பெயர் சூட்டியதாகவும் அதன்பிறகு அரசருக்கு வெம்மைநோய் குணமாகியது என்பதும் செவிவழிச் செய்தியாகும்.
திரிபுரங்களை சிறு சிரிப்பால் எரித்து நிற்கிறார் சிவபெருமான். தேவர்கள் பூமாரி பொழிகின்றனர். சிவனாரைக் குளிர்விக்க எண்ணி கெடில நதியை உருவாக்குகிறார் உமையம்மை. இருவரும் ஏகாந்தமாக நீராடுகையில் சிவனாரின் முடியிலிருந்த கங்கை கெடில நதியில் கலக்க அந்நதி தென்கங்கை என்ற பெயர் பெறுகிறது. இந்த தென்கங்கை நதிக்கரையில் மிக அரிதான மூலிகைகள் இருப்பதைக்கண்டு இங்கு சிவனாரின் திருமேனியை லிங்கத்திருமேனியாய் அமைத்து தென்கங்கை நீரினால் அபிஷேகித்து மகிழ்ந்தாள் அம்பிகை. சிவனாரும் உடல் வெப்பம் குளிர்ந்து மனமகிழ்ந்து அருளினார். காலங்கள் உருண்டோடின. இப்பகுதியை ஆண்ட ஒரு மன்னனுக்கு வெம்மை நோய் கண்டது. அரண்மனை வைத்தியர்கள் பல மருந்துகளைக் கொடுத்தும் பயனளிக்கவில்லை. அப்போது அறந்தாங்கி நல்லூர் என அழைக்கப்பட்ட இப்பகுதியிலுள்ள மூலிகைகளைப் பற்றி கேள்விப்பட்ட அரசன், இங்கு வந்தான். புதர் மண்டிய இடத்தில் ஈசனைக் கண்டு வணங்கினான். தென் கங்கை நீரில் குளித்து, மூலிகைகளை உட்கொண்டு நோய் தீர்ந்தான். நோய் தீர்த்த இறைவனுக்கு கோயில் ஒன்றை அமைத்து தென்கங்கை நீர் அதன் வாசல் வரை வர வாய்க்கால் அமைத்தான். வெம்மை நோய் தீரும் அற்புதத்தை அறிந்த மக்கள் பலரும் தென்கங்காபுரிஸ்வரர் வணங்கி பலன் பெற்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பவுர்ணமி தோறும் நிலவொளி மூலவரின் மீது படுவது சிறப்பு. உடலில் உள்ள வெப்பநோயை போக்கும் தலம். வைத்தீட்வரராகவும், மருந்தீட்சரராகவும் இருந்து அருள்புரிகிறார். திருஅதிகையில் முப்புரம் அழித்து அம்மை அப்பர் இருவரும் ஓய்வெடுத்த சிறந்த மூலிகைகள் கலந்த பூந்தோட்ட வனமான இங்கு ஓய்வெடுத்து உடல்வெப்பத்தை போக்கிக் கொண்ட நதியும், குளுமையைப் போக்கி கொண்ட பூந்தோட்டமான திருக்கோயிலும் ஆகும். வெப்ப நோயை நோக்கி ஆரோக்கியம் தந்த தலம். இறைவனுக்கே உரிய அற்புதத் திருத்தலமாகும்.
இருப்பிடம் : இவ்வூர் கடலூரிலிருந்து மேற்கு திசையில் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பண்ருட்டியிலிருந்து நரிமேடு கிழக்கு நோக்கி 6 கி.மீ. தூரம் உள்ளது. பண்ருட்டி தென்கிழக்கு திசையில், பழைய கடலூர் பாதை திருஅதிகை, திருவகீந்திரபுரம் செல்லும் மெயின்ரோட்டிலிருந்து பாலூர் முகப்பிலேயே தென்திசையில் நரிமேடு பேருந்து இறக்கத்தில் 50 மீட்டர் தொலைவில் திருக்கோயில் உள்ளது. (மெயின்ரோட்டில் இறங்கவும்). மெயின்ரோடு முகப்பில் முருகன் திருக்கோயில் உள்ளது, கழுத்து மாரியம்மன் கோயில் உள்ளது