பவுர்ணமி தினத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. அன்று செந்தூர அலங்காரத்தில் அருளாட்சி புரிவார். செந்தூரம் வெற்றியின் அடையாளம் மேலும் செந்தூரமே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பெறுகிறது. இக்கோயிலில் ஹனுமன் ஜெயந்தியை முக்கிய வைபவமாக கொண்டாடுகின்றனர். மார்கழி அமாவாசை மூல நட்சத்திரத்திற்கு 10 நாட்களுக்கு முன் விழா ஆரம்பம். தொடர்ந்து 12 நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். முதல் நாள் விநாயகர் வழிபாடு, அனுக்ஞை விசேஷ அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை, ஹோமம் எனத் தொடங்கி அடுத்தநாளிலிருந்து 10 நாட்கள் வரை லட்சார்ச்சனை நடைபெறும்.
ஹனுமன் ஜெயந்தியன்று அருகில் உள்ள வரத ராஜ விநாயகர் கோயிலிருந்து 108 பால் குடங்கள் எடுத்து வந்து சுவாமிக்கு பாலாபிஷேகம், 1008 சங்காபிஷேகம் மற்றும் வசந்த மண்டப பூஜை நடைபெற்றபின்பு சுவாமி உள்வீதி வெளி வீதி புறப்பாட்டுடன் விழா நிறைவடையும். இத்தலத்தின் வருட மஹா உற்சவம் 7 நாட்கள் கொண்டாடப்படும் மோதிரத் திருவிழா வாகும். சீதாதேவி ஹனுமனிடம் மோதிரம் (கணையாழி) கொடுத்த நிகழ்வினை மையப்படுத்தி இவ்வைபவம் மாசி மாதம் ஏகாதசியன்று தொடங்கும். தினமும் அஷ்டோத்திரசத (108)சங்காபிஷேகமும் பஜனையும் நடைபெறும். நிறைவு நாளான 7ம்நாளான்று மோதிர திருவிழாவைத் தொடர்ந்து தீர்த்தோற்சவத்துடன் விழா நிறைவுபெறும். இதில் கங்கை மற்றும் சுற்றுப்புறங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசிப்பது கண்களை விட்டு அகலாத காட்சியாகும்.
தல சிறப்பு:
இலங்கை வந்ததும் அனுமன் கால் பதித்த முதல் இடம் என்பதால் இக்கோயில் மிகச் சிறப்புகுரியதாகும்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை திறந்திருக்கும்.
மிகப்பெரியதும், உயரமானதும் விமானத்துடன் கூடியதுமான கருவறை அமைந்துள்ளது. மூலவர் பீடம் நீங்கலாக 16 அடி உயரம் உள்ளதால் அபிஷேக அலங்காரங்கள் செய்வதற்கு வசதியாக இருபுறமும் படிக்கட்டுகளையும் சுவாமியின் பின்புறம் மேடையையும் அமைத்துள்ளனர். கருவறை முன்பு மிகப்பெரிய விலாசமான வசந்த மண்டபம் அமைந்துள்ளது. விநாயகர் தியானேஷ்வர், சீதாதேவி, ராமர் லட்சுமணன் ஆகியோர் பரிவார தெய்வங்களாக வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கின்றனர். கோயில் உயர்ந்த இடத்தில் அமைந்திருப்பதால் எங்கிருந்து பார்த்தாலும் அதன் எழிலான தோற்றத்தைக் காணமுடியும். கோயில் வரை பாதை இருந்தாலும் வாகனங்களை அனுமதிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே அனுமதிக்கின்றனர். அதாவது பிரதான சாலையிலிருந்து நடந்துதான் செல்லவேண்டும். மலைப்பாங்கான பகுதியில் படிகள் அழகிய வடிவில் அமைத்துள்ளனர். கோயிலைச் சுற்றிலும் பசுமையான புல்வெளி, பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்செடிகள் என ரம்மியமாக காட்சியளிக்கின்றன.
பிரார்த்தனை
வேண்டியதை தரும் ஆற்றல் மிக்கவர்.
நேர்த்திக்கடன்:
அனுமனுக்கு வெற்றிலை மாலை, வெண்ணை சாற்றப்படுகிறது.
தலபெருமை:
கோயில் எதிரே உள்ள மலையில் ஹனுமன்படுத்திருக்கும் தோற்றம்போன்று அமைந்திருப்பது ஒரு வித்தியாசமான காட்சியாகும்.
தல வரலாறு:
ராமரின் பாதம் பட்டதாலும், ராமாயணத்தில் முக்கிய நிகழ்வுகள் நடந்ததாலும் இலங்கையை புண்ணிய பூமி என்பர். ராமாயணத்தில் முக்கிய நிகழ்வுகள் நடந்த இடங்களான சீதை இலங்கையில் சீதை சிறை வைக்கப்பட்ட இடத்தில் சீதை அம்மன் கோயில், ராமர் வழிபட்ட இடத்தில் முன்னேஸ்வரம் கோயில் ராமர் சிவலிங்க பிரதிஷ்டை செய்த மானாவரியில் ராமலிங்க சுவாமி கோயில்களை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அமைத்துள்ளனர். ராமாயணத்தில் எத்தனையோ சம்பவங்கள் உண்டு என்றாலும், மிக மிக முக்கியமானதும் திருமாலின் அவதார நோக்கமான ராவண வதம் நிகழ்வதற்கு முதல் அடியாகவும் அமைந்தது அனுமன் இலங்கையில் காலடி பதித்ததுதான். ராமனின் கட்டளையை ஏற்று சீதையைத் தேடி இலங்கைக்கு அனுமன் வந்தபோது முதலில் கால் பதித்த இடத்தில் எதனாலோ பலகாலம் எந்தக் கோயிலோ அல்லது வழிபாட்டு தலமோ அமையவில்லை.
1980ம் -ஆண்டு சுவாமி சின்மயானந்தா இலங்கை நுவரேலியாவில் உள்ள காயத்ரி பீடத்திற்குச் சென்றுவிட்டு திரும்பியபோது அவரது வாகனம் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் திடீரென ஓரிடத்தில் நின்று விட்டது. பழுது ஏதும் இல்லாத நிலையில் பயணம் தடைப்படக்காரணம் தெய்வீகம் சார்ந்ததாக இருக்கலாமோ என்று எண்ணிய அவர், காரைவிட்டு இறங்கி, அந்த இடத்திலேயே சற்றுநேரம் தியானத்தில் அமர்ந்தார். இந்த பகுதி கண்டியில் இருந்து நுவரேலியாவுக்குச் செல்லும் பிரதான சாலையில் உள்ளது. சின்மயானந்தா இந்த இடத்தில் வியாபிக்கும் ஹனுமனின் ஒப்பற்ற சக்தியை உணர்ந்தார். இலங்கையில் முதன் முதலாக ஹனுமனின் பாதம்பதித்த இந்த இடத்தில் ஓர் கோயில் அமைக்க முடிவு செய்தார். 3200 அடி உயரமுள்ள விவேந்தன் மலை அமைந்துள்ள அப்பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை வாங்கினார். அந்த இடத்திற்கு ராம்போத எனப் பெயர் சூட்டினார். ராம் போத எனில் ராமர் படை எனவும், ராமர் சக்தி எனவும் அர்த்தம் கூறப்படுகிறது.
ராமர், ராவணனை எதிர்த்துப் போரிட வானரப் படைகளை இங்குதான் ஓரணியில் திரட்டினார். மேலும் ஹிந்து கடவுளர்களுக்கு பல்வேறு இடங்களில் கோயில்கள் இருந்தாலும் அனுமனுக்கு தனிக்கோயில் இலங்கையில் இல்லை. எனவே அவரை மூலமூர்த்தியாகக் கொண்டு சின்மயாமிஷன் மூலம் கோயில் அமைக்க முடிவு செய்து, அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டார். சின்மயா மிஷன் மூலம் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. மகாபலிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற சிற்பி முத்தையா அவர்களிடம் 16 அடி உயரமுள்ள பக்த ஹனுமன் சிலை செய்யும் பொறுப்பை ஒப்படைத்தனர். சிலை 16 அடி உயரம் உள்ளதால், முதலில் ஹனுமன் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தனர். பின் கோயில் கட்டுமான பணிகளை முடித்தனர். 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 8ம் நாள் வெகுவிமர்சையாக மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இலங்கை வந்ததும் அனுமன் கால் பதித்த முதல் இடம் என்பதால் இக்கோயில் மிகச் சிறப்புகுரியதாகும்.