கடலுார் மாவட்டத்தில் நடைபெறும் பெருவிழாக்களில் அம்மன் திருக்கல்யாண பெருவிழா முக்கியமானது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல்11 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை.
முகவரி:
அருள்மிகு பிடாரி அரசியம்மன் கோவில்,
காட்டுக்கூடலுார் ரோடு,
இருப்பு 607 805
விருத்தாசலம்.
போன்:
+91 9751093220
பொது தகவல்:
கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலின் நுழைவு வாயிலில் கொடிமரம், பலிபீடம் உள்ளன. எதிரில் அருள்மிகு.பிடாரி அரசியம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பின்புறத்தில், தனித்தனி சன்னதிகளில் விநாயகர், முருகன்அருள்பாலிக்கின்றனர்.
ஆதி காலத்தில் சிவபெருமானும், பார்வதியும் திருமணம் முடிந்து சுகபோகங்களை அனுபவித்து வரும்போது; ஒரு நாள் சிவபெருமானிடம் சூரியன், சந்திரன் யார் என பார்வதி கேட்டார். அப்போது, இருவரும் எனது இரு கண்கள் என்றதும்; பார்வதி சிவனின் இரு கண்களையும் தன்கைகளால் மூடினாள். அப்போது, உலகம் முழுவதும் இருளில் மூழ்கி இயக்கம் தடைபட்டது. இதைக் கண்ட தேவர்கள் சிவபெருமானிடம் வந்து கண்ணைத் திறவுங்கள், உலக இயக்கம் முடங்கியுள்ளது என்றனர். தேவர்களின் வேண்டுகோளையேற்று சிவபெருமான் கோடி சூரிய ஒளியுடைய தன் நெற்றிக்கண்ணை திறந்தார். உலக இருள் நீங்கி ஒளிவீசத்தொடங்கியது. பரமசிவனின் கண்ணை பொத்திய குஇரண்டு கைகளையும் பார்வதி நீக்கினார். இதனால், பரமசிவனின் மூன்று கண்களும் தீ பிழம்பாக சிவந்து காணப்பட்டது. இதனால், பார்வதி பரமசிவனின் கோபத்திற்கு ஆளானார்.
பரமசிவனின் கண்களை மூடிய பாவத்திற்கு கடல் சூழ்ந்த பூமியில் கடும் தவமியற்றி எனது இடபாகம் வந்தடைவாய் என உரைத்தார். இதைக்கேட்ட பார்வதி அம்மை தவமியற்ற இடம் தேடி அலைந்தபோது காஞ்சியைத்தாண்டி, தென்திசையில் வரும்போது பட்டமரங்கள் தளிர்த்து செழித்து தேனோடு மலர்களை சொறியும் அடர்ந்த கானகமாக விளங்கிய இடத்தில் தவம் ஏற்றாள் அதாவது யுக முடிவில் தாவரம் முதல் ஜீவராசிகள் வரை எல்லாம் அழிந்து பஞ்ச பூதங்கள் (ஆகாயம், பூமி, நீர், நெருப்பு, காற்று) மட்டும் அழியாமல் ஒன்றிணைந்து இருந்த அடர்ந்த காட்டில் பார்வதி சிவனை நோக்கி கடும் தவமிமியற்றினாள். நீண்ட நாள் அசைவின்றி பார்வதி தவமியற்றியதால், அவரை சுற்றி புற்று வளர்ந்து, மறைந்து விட்டது.
பார்வதி தவமியற்றி அடர்ந்த காடுகளின் ஓரத்தில் புல்வெளிகள் நிறைந்து காணப்பட்டது. அந்த இடத்தில் தற்போதைய வடக்கிருப்பு கிராம மக்களின் மாடுகளை அரசன் எனும் அரிஜனன் மேய்த்து வந்தான். அப்போது, மேய்த்து வரும் ஒரு மாட்டில் மடி வற்றி காணப்படுவது குறித்து உரிமையாளர் அரசனை எச்சரித்தனர். அதையடுத்து மாட்டை தொடர்ந்து கண்காணித்து அரசன் பின் தொடர்ந்து சென்றபோது; காட்டிலுள்ள பார்வதி தவம் இயற்றும் புற்றின்மீது பசு பால் சொறிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். பின்னர், வீடு திரும்பிதும் தான் கண்ட காட்சிகளை அனைவரிடமும் கூறினான். அந்த காட்சியைக் கண்ட மக்கள் அரசன் கண்ட அம்மை என்பதால் அரசன் அம்மை என பக்தியுடன் வழிபட்டனர். இத்திருக்கோவிலைச் சுற்றி எட்டு திசைகளிலும் கிழக்கிருப்பு, தெற்கிருப்பு, வடக்கிருப்பு, நாச்சிவெள்ளையன் குப்பம், நெல்லடிக்குப்பம், நண்டுகுழி, செடுத்தாங்குப்பம் ஆகிய 9 கிராமங்களுக்கும் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் பிடாரி அரசியம்மன் அருள்பாலிக்கிறாள். இவ்வாறு வழிபட்டு வரும் காலத்தில் ஒரு நாள் காட்டுவழியாக வளையல் வியாபாரி ஒருவன் சென்றான். அவனை அம்மன் கூவி அழைத்தார். சத்தம் வந்த திசையை நோக்கி செல்ல அங்கு அம்மன் அசரீரியாக தனக்கு வளையல் போடுமாறு தெரிவித்தார். வளையல்போட்டதற்கான பணத்தை மேற்கிருப்பில் உள்ள மணியக்காரர் பொன்னப்பபடையாட்சி வீட்டை அடையாளம் கூறி, அங்கு வாங்கிக் கொள்ளுமாறு கூறியது. அதன்படி, அம்மன் சொன்ன வீட்டிற்கு சென்று பணத்தை பெற்றுக் கொண்ட வளையல்காரன், அம்மனை அடைய மீண்டும் கோவிலுக்கு வந்து அம்மனை அழைத்தான். அம்மன் வெளியில் வராமலும், குரல் கொடுக்காமலும் இருந்ததால் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது, கோபாவேசத்துடன் தன் திரிசூலத்தால் வளையல்காரனை அழித்து, கல்லாகுமாறு சபித்தது. அன்று முதல் அரசியம்மன் பிடாரி அரசியம்மன் (திரிசூலம் என்பது பிடாரி என்றழைக்கப்படுகிறது). இன்றும் இக்கோவிலில் வளையல்காரன் கல்உருவத்தை காணலாம். இந்த பாவம் தீரவே, அம்மனின் திருக்கல்யாண உற்சவத்தன்று வளையல்காரர்கள் வளையல் சீர்செய்வர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கடலுார் மாவட்டத்தில் நடைபெறும் பெருவிழாக்களில் அம்மன் திருக்கல்யாண பெருவிழா முக்கியமானது.
இருப்பிடம் : விருத்தாசலத்திலிருந்து காட்டுக்கூடலுார் செல்லும் வழியில் 18 கி.மீ., தொலைவிலும், கடலுாரிலிருந்து 40 கி.மீ., தொலைவிலும் உள்ளது. விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய ஊர்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி