திருவாரூரிலிருந்து ஒவ்வொரு ஊராக சென்று கோவில்களில் பாடிவந்த சுந்தரர் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலை நாதர் (விருத்தகிரீஸ்வரர்) கோவிலுக்கு வந்தபோது பழமைவாய்ந்த ஊர் என்பதால் பொன் பொருள் யாதும் கிடைக்காது என புறப்பட்டபோது; பழமலைநாதர், தன்னை பற்றி பாடாது சென்ற சுந்தரரை எப்படியாவது கூட்டிவந்து பாடவைக்குமாறு தன் மைந்தன் முருகனிடம் கட்டளையிட்டபோது முருகன் மேற்கில் கொளஞ்சியப்பராக, தெற்கே (பெண்ணாடம் சாலையில்) வேடப்பராக, வடக்கே (கண்டியங்குப்பம்) வெண்ணுமலையப்பர் , கிழக்கே (கோமாவிடந்தல்) கரும்பாயிரம் கொண்டவராகவும் நான்கு புறமும் சுந்தரரை மடக்கி, அவரிடமிருந்த பொன்பொருளை பறிமுதல் செய்து, அவரை பழமலைநாதரிடம் கொண்டுசென்று ஒப்படைத்து, பாடவைத்ததாக வரலாறு கூறுகிறது. அதனால், கொளஞ்சியப்பர் கோவிலைப்போன்று, வேடப்பர் கோவிலிலும் பிராது கட்டும் வழக்கம் உள்ளது. பிராது கட்டுபவர்கள் தொடர்ந்து 125 ரூபாய் என மூன்று வாரங்களுக்கு கட்ட வேண்டும். மூன்று மாதங்களில் கோரிக்கை நிறைவேறினால் பிராதை வாபஸ் பெறவேண்டும். இல்லையெனில் மீண்டும் புதுப்பிக்கலாம்.