வயலில் கிடைத்த முருகன், நாக சுப்பிரமணியர், நாக கணபதி, ருத்ராட்ச சிவன்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
நிர்வாக அதிகாரி,
அருள்மிகு விருப்பாச்சி ஆறுமுக நயினார் திருக்கோயில்,
தீர்த்தத்தொட்டி,
கோடாங்கிபட்டி-625547
தேனி மாவட்டம்.
போன்:
+91- 93641 19656.
பொது தகவல்:
இத்தலவிநாயகர் செல்வ கணபதி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் திரிதளம் எனப்படுகிறது. பிரகாரத்தில் முருகன் சன்னதிக்கு இருபுறமும் இரண்டு வில்வ மரங்கள் இருக்கிறது. இதுவே இத்தலத்தின் விருட்சமாகும். தீர்த்தத்தொட்டியின் சுவரில் முருகனை வழிபட்ட நிலையில் சப்த கன்னியர், சிவலிங்கம், விநாயகர், முருகன் சிற்பங்கள் இருக்கிறது. இக்கோயிலுக்கு மிக அருகில் மனிதர்களின் பாவ, புண்ணிய கணக்கெழுதும் சித்திரபுத்திர நாயனார் கோயில் இருக்கிறது.
பிரார்த்தனை
நாக தோஷம், செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தீர்த்த நீராடி, முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். கல்வி சிறக்க, தொழில் வளம் பெற, குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகவும் இவரை வழிபடுகிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமியை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள், பால், பன்னீர் அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
தலபெருமை:
வயலில் கிடைத்த முருகன்: இங்கு வசித்த விவசாயி ஒருவரின் கனவில் தோன்றிய முருகன், ஒரு வயலைச் சுட்டிக்காட்டி தான் அங்கு சிலை வடிவில் இருப்பதாக உணர்த்தினார். விவசாயி, இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னரிடம் கூறினார். அதன்பின் வயலில் முருகன் சிலையை எடுத்த அவர்கள், இங்கு பிரதிஷ்டை செய்து சன்னதி எழுப்பினர். விருப்பாச்சி என்ற ஊரில் பக்தருக்கு அருள்புரிந்த முருகன் எழுந்தருளிய தலமென்பதால், "விருப்பாச்சி ஆறுமுகனார்' என்று பெயர் பெற்றார்.
நாக சுப்பிரமணியர்: மூலஸ்தானத்தில் முருகன், ஆறு முகங்களுடன் திருவாட்சியுடன் சேர்ந்த சிலை அமைப்பில் காட்சி தருகிறார். உடன் வள்ளி, தெய்வானை இல்லை. காலையில் மட்டும் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து பூஜிக்கின்றனர். இவருக்கு அருகில், ஏழு தலை நாகம் குடைப்பிடித்தபடி இருக்க, அதன் மீது மயில் வாகனத்துடன் நின்ற கோலத்தில் நாக சுப்பிரமணியர் காட்சி தருகிறார். இவருக்கு பூஜை செய்தபின்பே, மூலவரை பூஜிக்கிறார்கள். நாக தோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். இவரைப்போலவே கோயில் முன் மண்டபத்தில் செல்வ கணபதிக்கு அருகில் நாக விக்னேஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார்.
ருத்ராட்ச சிவன்: தனி விமானத்துடன் கூடிய சன்னதியில், சிவன் "ருத்ர மூர்த்தி' என்ற பெயரில் அருளுகிறார். இவருக்கு எதிரில் நந்தி இல்லை. சிவதீட்சை பெற்று, குரு அந்தஸ்தில் இருப்பவர்கள் நெற்றியில் ருத்ராட்ச மாலையை அணிவர். இதைப்போலவே இங்கு சிவலிங்க பாணத்தில் ருத்ராட்ச மாலை இருக்கிறது. இங்கு சிவன், குருவாக இருப்பதாக ஐதீகம். எனவே, இவரது சிலையோடு சேர்த்து ருத்ராட்ச வடிவம் வடிகப்பட்டிருப்பது வேறெங்கும் காண முடியாத அமைப்பு. குரு பெயர்ச்சியால் தோஷம் உண்டானவர்கள், வியாழக்கிழமைகளில் இவருக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வேண்டிக்கொள்ளலாம். ருத்ரமூர்த்திக்கு ஐப்பசி பவுர்ணமில் அன்னாபிஷேகம் செய்யும்போது, அன்னத்திலேயே ஒரு லிங்கம் பிடித்து, பூ, வில்வம் அணிவித்து, சந்தனம் வைத்து பூஜை செய்கின்றனர். மறுநாள் அதை ஆற்றில் கரைத்து விடுகின்றனர். இந்த "அன்ன லிங்க' தரிசனம் மிக விசேஷமானது.
முனை மழுங்கிய வேல்: கொட்டக்குடி ஆற்றின் மேற்கு கரையில் இக்கோயில் அமைந்திருக்கிறது. சித்திரைப் பிறப்பன்று இந்த முருகன், வயலில் கிடைத்தாராம். எனவே அன்று இவருக்கு விசேஷ அபிஷேக, பூஜைகளுடன் விழா நடக்கிறது.முருகன் சன்னதி எதிரில், முற்காலத்தில் வழிபடப்பட்ட வேல் இருக்கிறது. இதன் முனை, கூர்மையின்றி உடைந்த நிலையிலேயே தற்போதும் இருக்கிறது. முருகன், தனது பக்தர்களுக்கு இவ்வாறு முனை மழுங்கிய நிலையில் கொடுத்தாகச் சொல்கிறார்கள். கோயிலுக்கு எதிரே தீர்த்தத்தொட்டி உள்ளது. இந்த தீர்த்தம் எங்கிருந்து உருவாகி வருகிறது எனத் தெரியவில்லை. முருகனின் பாதத்திற்கு கீழே உற்பத்தியாகி, இங்கு வருவதாகச் சொல்கின்றனர்.
தல வரலாறு:
அசுரன் ஒருவனை அழிக்கச் சென்ற சப்தகன்னியர், தவறுதலாக ஒரு மகரிஷியை அழித்து விட்டனர். இந்த தோஷம் நீங்க, இத்தலத்தில் தீர்த்தம் உருவாக்கி முருகனை வழிபட்டனர். அவர்களுக்கு காட்சி தந்த முருகன், தோஷத்தை போக்கியருளினார். பிற்காலத்தில் இங்கு தீர்த்தம் மட்டும் இருந்தது.
பல்லாண்டுகளுக்கு பின்பு இப்பகுதியில் வசித்த பக்தர் ஒருவர் பழநிக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பினார். வழியில் விருப்பாச்சி என்ற இடத்தில், கலவரம் உண்டானது. இதனால் அவரால் ஊர் திரும்பமுடியவில்லை. வீடு திரும்பும் வரையில், வழியில் தங்கக்கூடாது என நினைத்தவர், முருகனிடம் தனக்கு வழி காட்டும்படி வேண்டினார்.
அப்போது அங்கு பாலகன் ஒருவன் அவரிடம், ஒரு முனை மழுங்கிய வேலைக் கொடுத்து, "இதை கையில் பிடித்துக்கொண்டு செல்லுங்கள். வழி கிடைக்கும்!' என்றான். அவரும் வேலை வாங்கிக்கொண்டு ஊர் திரும்பினார். வழியில் இங்கிருந்த தீர்த்தத்தொட்டியில் நீராடியவர், தீர்த்த கரையில் வேலை வைத்துவிட்டுச் சென்றார். பின்பு பக்தர்கள் இந்த வேலையே, முருகனாக பாவித்து வழிபட்டு வந்தனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:வயலில் கிடைத்த முருகன், நாக சுப்பிரமணியர், நாக கணபதி, ருத்ராட்ச சிவன்.