திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள பிரசாத ஸ்டால் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராஜகோபுரம் வழியாக சென்றால் ரங்கா ரங்கா கோபுரம், வெள்ளை கோபுரம் மற்றும் கிழக்கு வாசல் ஆகியவற்றின் வழியாக தரிசனத்திற்கு செல்ல முடியும்.
பெரும்பாலும் அம்மா மண்டபத்திலிருந்து ராஜகோபுரம், ரெங்கா ரெங்கா கோபுரங்கள் வழியாகவே பக்தர்கள் ரெங்கநாதரை தரிசித்து வருவார்கள். இங்கு கருட மண்டபத்துக்கும் ஆரியப்பட்டால் வாசலுக்கும் இடைப்பட்ட மண்டபத்தில், கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாத ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு புளியோதரை, பொங்கல், தயிர், சாதம், வடை , லட்டு போன்ற பிரசாதங்கள் விற்பனை செய்யப்படும். இதற்கு அருகில், பக்தர்கள் வசதிக்காக ஏடிஎம் மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அதிகாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இந்த பிரசாத ஸ்டால் முழுமையாக எரிந்து சேதம் அடைந்துள்ளது. ஏடிஎம் மையங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் திரை துணியால் மறைப்பு ஏற்படுத்திவிட்டு, பக்தர்களை அனுமதிக்காமல், கோவில் பணியாளர்கள் தீவிபத்து ஏற்பட்ட இடத்தை சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி கழுவி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டு அதன் அடையாளமாக மண்டபம் பகுதியில் கரிப்புகை படிந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை.