பதிவு செய்த நாள்
09
மார்
2020
02:03
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நடந்த மாசிமக தீர்த்தவாரியில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கடலுார், தேவனாம்பட்டிணம் கடற்கரையில் முதல் நாள் மாசிமக தீர்த்தவாரி நேற்று நடந்தது. கடலுார் கோண்டூர் மாரியம்மன், நெல்லிக்குப்பம் வராகி அம்மன், சேடப்பாளையம் மாரியம்மன், காரைக்காடு அங்காளம்மன், வெள்ளப்பாக்கம் முத்துமாரியம்மன், விலங்கல்பட்டு முத்துமாரியம்மன் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மேள தாளங்கள் முழங்க கடற்கரைக்கு எழுந்தருளச் செய்து, தீர்த்தவாரி நடந்தது. காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். நல்லவாடு, தமன்னாம்பேட்டை, பரங்கிப்பேட்டை, சாமியார்பேட்டை, அய்யம்பேட்டை கடற்கரையிலும், காட்டுமன்னார்கோவில் கொள்ளிடம் ஆறு, உட்பட மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் நடந்த தீர்த்தவாரியில் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் தலைமையில், ஏ.டி.எஸ்.பி., 9 டி.எஸ்.பி.,க்கள் உட்பட 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேவனாம்பட்டிணம் கடற்கரையில் இரண்டாம் நாளான இன்று (9ம் தேதி) திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள், திருவந்திபுரம் தேவநாத சுவாமி, வண்டிப்பாளையம் அங்காளம்மன், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜப் பெருமாள் உட்பட பல்வேறு உற்வச மூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடக்கிறது.
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டை கடற்கரையில் மாசி மகத்திருவிழாவையொட்டி 100க்கும் மேற்பட்ட சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு சி.புதுப்பேட்டை கடற்கரையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. புதுச்சத்திரம் பெரியக்குப்பம் கடற்கரை பகுதியில் தோப்புக்கொல்லை, பள்ளிநீரோடை, புலியூர்காட்டுசாகை, அனுக்கம்பட்டு, நீராழி, அகரம், சேப்ளாநத்தம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்த சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்றன.அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க சிதம்பரம் டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பாழான உணவு: மாசிமக பக்தர்களுக்கு தன்னார்வலர்கள் அன்னதானம் வழங்குவது வரவேற்கத்தக்கது. அதே வேளையில், அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். மேலும், அதிகாரிகள் உத்தரவின்படி அன்னதானம் பிளாஸ்டிக் கவரில் வழங்கக் கூடாது. உணவு சாப்பி்ட்ட பிறகு தட்டுகள், பேப்பர் கப், தண்ணீர் பாட்டிலை கீழே போட தனியாக பெட்டி வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது. ஆனால், கடலுாரில் அன்னதானம் வழங்கியவர்கள் அனுமதி பெறாததால், அதுபோன்ற விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை. இதனால், பொதுமக்கள், சாப்பிட்ட பிறகு தட்டுகள், கப்பு, தண்ணீர் பாட்டில்களை ஆங்காங்கே சாலையில் வீசி விட்டுச் சென்றனர். மேலும், உணவுகளையும் கீழே வீசியதால், காலில் மிதிபட்டது. பொதுமக்களும், உணவுகளை வீணாக்காமல் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு தட்டுகள், கப்புகள், தண்ணீர் பாட்டிலை குப்பை தொட்டியில் போட முன்வர வேண்டும்.