வத்தலக்குண்டு: ஆந்திராவில் உள்ள மந்திராலயத்திற்கு கொரோனா வைரஸ் தாக்கத்தால் பக்தர்கள் வர நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ராகவேந்திர சுவாமிகள் மந்திராலயத்திற்கு பக்தர்கள் வருகையை தவிர்க்க வேண்டும் என மந்த்ராலய பீடாதிபதி சுபதேந்திர தீர்த்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான வீடியோ தமிழகத்தில் உள்ள அனைத்து ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவன மடங்கள், பக்தர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.அந்த வீடியோவில் பேசும் சுபதேந்திர தீர்த்தர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அரசுக்கு உதவும் நோக்கிலும், பக்தர்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் விதமாக அவர்களின் பாதுகாப்பு கருதி மந்திராலயத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். பக்தர்கள் ஆங்காங்கே உள்ள ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனங்களில் சுவாமி தரிசனம் செய்து கொள்ள வேண்டும். மந்திராலயத்தில் அனைத்து பூஜைகளும் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.