பதிவு செய்த நாள்
15
மே
2012
10:05
ஊட்டி: ஊட்டி பர்ன்ஹில் நாராயண குருகுலத்தில் குருபூஜை நடந்தது. ஊட்டியில் உள்ள நாராயண குருகுலத்தின்ஆண்டு குருபூஜை; 89ம் ஆண்டு நிறைவு விழா; நடராஜ குரு, நித்யசைதன்ய யதியின் சமாதி நாள் ஆகியவை நடந்தன. இதில், குருமுனி நாராயணபிரசாத் பேசுகையில்,""நீலகிரி மாவட்டத்தில் நடராஜ குருவால் அமைக்கப்பட்ட இந்த குரு குலத்தில், அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான ஆன்மிக தேடல், தியானம் ஆகியவை கிடைக்கிறது. "இறைவன் ஒருவரே, அனைத்து ஜீவராசிகளும், தாவரங்களும், அனைத்து உயிர்களும் இயற்கையின் நியதிகளை அடிப்படையாக கொண்டதேயாகும். மத மோதல்கள், ஜாதி பிரிவினைகள் ஏற்ற தாழ்வற்ற ஆன்மிக ஞானம் பொருந்திய சமுதாயம் உருவாக வேண்டும், என்ற நாராயண குருவின் வாழ்வும், தத்துவமும் எல்லா கால கட்டங்களுக்கும் பொருந்தும், என்றார். சுவாமி சுயம் பிரகாசனந்தா, பகவான் ரமண மகரிஷியின் உபதேச சாரம் குறித்து விளக்கினார். கருணாகரன், சுவாமி அமிர்தானந்தா சரஸ்வதி உட்பட பலர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். "நிலவோடும், பூக்களோடும் என்ற நித்ய சைதன்ய யதியின் சொற்பொழிவுகள் அடங்கிய புத்தகத்தை குருமுனி நாராயணபிரசாத் வெளியிட சுவாமி ராமகிருஷ்ணா பெற்றுக்கொண்டார். இறுதியாக, நந்தினி பிரியாவா, ஹேமலதா ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடந்தது. இரவு 7.00 மணிக்கு டாக்டர்.தருண் சாப்ரா "நீலகிரியின் பழைய பண்பாடு என்ற தலைப்பில் பேசினார். ஏற்பாடுகளை, சுவாமி தன்மயா, சுவாமி வியாசபிரசாத் ஆகியோர் செய்திருந்தனர்.