கரூர்: அரவக்குறிச்சியை அடுத்த சேந்தமங்கலம் கீழ்பாகம் ரெங்கப்பகவுண்டன்வலசு ஸ்ரீஏழுமலையான் கோவிலில் நடந்த தீர்த்தக்காவடி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசித்தி பெற்ற ஸ்ரீஏழுமலையான் கோவிலில் தீர்த்தக்காவடி விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. நடப்பாண்டு கடந்த 11ம் தேதி அதிகாலை 70க்கும் மேற்பட்டோர் ரெங்கப்பகவுண்டன்வலசில் இருந்து புறப்பட்டு கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். தொடர்ந்து இரவு பொன்னர் - சங்கர் நாடகம் நடந்தது. 12ம் தேதி காலை முதல் மதியம் வரை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அன்று மாலை 5 மணியளவில் ஸ்ரீஏழுமலையானுக்கு தீர்த்தம் செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை பொறுப்பாளர் பிச்சைமுத்து, 3வது வார்டு கவுன்சிலர் கருப்புசாமி உட்பட ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.