பதிவு செய்த நாள்
05
நவ
2020
04:11
மாமல்லபுரம்; கடம்பாடி, மாரி சின்னம்மன் கோவிலை, 1 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்த, கோவில் நிர்வாகம் முடிவெடுத்து உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடியில், ஹிந்து சமய அறநிலையத் துறையின், மாரி சின்னம்மன் கோவில் உள்ளது. இங்கு, 300 ஆண்டுகளுக்கு முன், அம்மன், வேப்பமரத்தில், சுயம்புவாக தோன்றி, கோவில் கொண்டுள்ளார்.இவரை வழிபடுவோரின் வேண்டுதல் நிறைவேறும் நம்பிக்கையால், தற்போது பக்தர்கள் அதிகரிக்கின்றனர்.இச்சூழலில், பழைய கோவிலை அகற்றி, புதிதாக கருவறை சன்னிதி, மகா, முன் மண்டபங்கள், குளத்திற்கு சுற்றுச்சுவர் என, திருப்பணிகள் மேற்கொள்ள, நிர்வாகம் முடிவெடுத்தது.நன்கொடையாளர் மூலம், முதலில், 2017ல் கட்டிய, முன்மண்டப பணி, அரைகுறையாக முடங்கி உள்ளது. நன்கொடையாளர் மூலமே, அனைத்து பணிகளையும் மேற்கொண்டு, இறுதி பணியாக, கருவறை சன்னிதி அமைக்க, முடிவெடுக்கப்பட்டது. கோவில் பணி முடக்கம் குறித்து, நம் நாளிதழில், செய்தியும் வெளியிடப்பட்டது.இந்நிலையில், கோவிலை புனரமைக்க, உயர் நீதிமன்ற குழு அனுமதிக்கு முயற்சிக்கப்பட்டது. புதிய கோவிலை அனுமதிக்காத குழு, பழுதுகளை மட்டுமே சீரமைக்க அனுமதித்துள்ளது.எனவே, சன்னிதியை சீரமைத்து, விமானம், முன் மண்டபம், கிராம தேவதை கோவில் என, 1 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்த முடிவெடுத்து உள்ளது. திருப்பணிகளை மேற்கொள்ள, நன்கொடையாளர்கள் ஆலோசித்துள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.