திருவிளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர். சங்ககால இலக்கியங்கள் இந்த வழிபாட்டை கார்த்திகை விளக்கீடு என்று குறிப்பிடுகின்றன. பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை போன்ற எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கிய ஆய்வாளர்கள் சிலர், கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர். கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவதைப் பற்றி சம்பந்தர் பாடியிருக்கிறார். மயிலாப்பூரில் தனக்கு நிச்சயம் செய்த பூம்பாவை என்ற பெண் திடீரென மரணமடையவே, அவர் விளக்கீடு காணாதே போதியே பூம்பாவாய் என்று பாடுவதில் இருந்து இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.