பதிவு செய்த நாள்
21
டிச
2020
07:12
”திருக்கோவில்களில் 12 ஆண்டுக்கு ஒரு முறை திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது, பல்வேறுகாரணங்களுக்காக, முன்னோர் வகுத்த மரபாக உள்ளது,” என்று, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தெரிவித்தார்.கோவையில் அமைந்துள்ளது சிரவணபுரம் கவுமார மடாலயம். ராமானந்த சுவாமிகளால் இந்த மடாலயத்தின் தலைவராகவும், சிரவை ஆதீனமாகவும் இருப்பவர் குமரகுருபர சுவாமிகள். அவர் கூறியதாவது:தஞ்சை, மதுரை, ராமேஸ்வரம் கோவில்கள் நம் கட்டட கலைகளுக்கு சிறப்புடையதாக போற்றப்படுகின்றன.
திருக்கோவில்களில் பல ஆண்டு உழைப்பின் மூலம் தமிழர் வரலாறுகளை சிற்பங்களாக வடிவமைத்துள்ளனர். அப்படிப்பட்ட கலைக்களஞ்சியங்களான திருக்கோவில்களை 12 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தல் என்பது நம் மரபாக இருந்து வருகிறது.கோவில்களை புதுப்பித்து வண்ணம் தீட்டி வடிவு காட்டி, திருக்குட நன்னீராட்டு செய்வது, முன்னோர் ஏற்படுத்தியுள்ள மரபு. ஏன் திருப்பணி செய்ய வேண்டும், திருக்குட நன்னீராட்டு செய்ய வேண்டும் என்று பலருக்கு ஐயம் ஏற்படுவது உண்டு.முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கலைச்செல்வங்களை உரிய முறையில் பாதுகாத்து, எதிர்கால சந்ததிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டுமெனில் அவற்றை புதுப்பிக்க வேண்டும். ஆண்டு தோறும், தைப்பொங்கலை முன்னிட்டு இல்லம்தோறும் துாய்மைப்படுத்துகின்றனர். ’பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பது அது தான்.திருக்கோவில்களை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க முடியாது. எனவே, 12 ஆண்டுக்கு ஒரு முறையாவது புதுப்பிக்க வேண்டும் என்பது மரபாக இருக்கிறது.
12 என்கிற எண்ணுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. தமிழ் மாதங்கள் 12, திருமுறைகள் 12, ராசிகள் 12, மகாமகம் 12 ஆண்டுக்கு ஒரு முறை, கும்பமேளா 12 ஆண்டுக்கு ஒரு முறை, குறிஞ்சி மலர்வது 12 ஆண்டுக்கு ஒரு முறை என்கிற வகையில், திருக்கோவில்கள், 12 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றன.கருவறைக்கு மேலே இருக்கும் விமானம். நுழைவாயிலுக்கு மேலே இருக்கும் ராஜகோபுரம் ஆகியவற்றில், தமிழர் வரலாறு, வாழ்க்கை முறை, கலைநுட்பத்தை காட்டும் சிற்பங்களை முன்னோர் அமைத்துள்ளனர். அவை காலத்தால் சிதைந்து போகும் வாய்ப்புகள் உள்ளன. பல கோவில்கள் உரிய காலத்தில் புதுப்பிக்காத காரணத்தால் சிதைந்து போவதை காணவும் முடிகிறது.இயற்கை சீற்றம் காரணமாகவும், பறவைகளின் எச்சம் காரணமாக செடி முளைத்தும், கோவில் கோபுரங்கள் சிதைந்து போவதை பார்க்கிறோம். உரிய காலத்தில் கோவிலை புதுப்பிக்கவில்லை என்றால் முன்னோர் உழைப்பும், கலைகளும் அழிந்து போகும்.இத்தகைய கலைச்செல்வத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை, அக்காலத்திலேயே முன்னோர் சிந்தித்துள்ளனர் என்பதற்கு தென்காசி கோவிலில் இருக்கும் கல்வெட்டு சான்றாக உள்ளது.’இந்த கோவிலின் ஒரு கல் கீழே விழுந்தாலும், அதை புதுப்பிப்பவர் காலில் நான் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து அவரது திருவடியை தாங்குவேன்’ என்று, திருப்பணி செய்த அரசர் வெட்டிய கல்வெட்டு தெரிவிக்கிறது.அது மட்டுமின்றி, கோவில் திருப்பணியின் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிற்பக் கலைஞர்கள், வர்ணம் தீட்டுவோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலைவாய்ப்பு இல்லையெனில் அந்த கலையே அழிந்து விடும்.தமிழின் சிறந்த ஆகம நுாலாக கருதப்படும் திருமந்திரம், ’கோவில்களில் வழிபாடு குறைந்தால், அதில் குற்றம் குறை ஏற்பட்டால், அது மக்களை பாதிக்கும். அரசனுக்கும் துன்பம் வரும். நாடும் வளம் குன்றும். திருட்டு அதிகரிக்கும்’ என்கிறது.’முன்னவனார் கோவில் பூசைகள் முட்டிடின்மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும்கன்னம் களவு மிகுந்திடும் காசினிஎன்னருள் நந்தி எடுத்துரைத்தானே’(திருமந்திரம் 518)எனவே கோவில்களில் தடையற்ற வழிபாடு நடக்க வேண்டும் என்கிறது திருமந்திரம்.திருக்கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது திருப்பணி செய்து, திருக்குட நன்னீராட்டு செய்ய வேண்டும். அதற்கு முன்னதாகவும் செய்யலாம். கோவில் கோபுரங்களில் இடி விழுதல் போன்ற ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு முன்னதாகவே கூட திருப்பணி செய்து திருக்குட நன்னீராட்டு செய்வது மரபாக இருக்கிறது. இதை முன்னோர் சொல்லியிருக்கின்றனர். செய்தும் இருக்கின்றனர்.’கோவில்களுக்கு ஏற்ப வழிபாடுகள் முறையாக செய்ய வேண்டும். வழிபாடுகள் குறையும்போது நோய் மிகுந்து மக்கள் துன்பப்படுவர். மன்னர்களின் வலிமையும் குறையும்’ என்கிறது இன்னொரு திருமந்திர பாடல்.பல கோவில் கோபுரங்களில், மரங்கள் முளைத்து சிற்பங்கள் அழிந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது பற்றி பக்தர்கள் அனைவரும், அரசுக்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தி கோவில்களை புதுப்பிக்க வேண்டும். அதிகாரிகளை நியமித்து காணாமல் போன கோவில் சிலைகளை தேடுகிறோம். அழிந்து கொண்டிருக்கிற கோவில்களை புதுப்பிக்க தனியாக ஆணையமே அமைக்கலாம்.தமிழகத்தில் மட்டும் அரசு சார்ந்தவை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அரசு சாராதவை ஏராளம் உள்ளன. அவற்றை புதுப்பித்து, பாதுகாக்க வேண்டும். ஒரு முயற்சி எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசு அனுமதி பெற்று முறையாக திருப்பணி செய்யவும், திருக்குட நன்னீராட்டு செய்யவும், பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.இவ்வாறு குமரகுருபர சுவாமிகள் கூறினார்.