புதுச்சேரி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பஞ்சவடீ கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில் 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சுவாமி தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார்.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, மூலவர் ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சுவாமிக்கு, நேற்று முன்தினம் சிறப்பு திருமஞ்சனம், திருவாராதனம், சாற்று முறை நடந்தது.நேற்று காலை 5:00 மணிக்கு, சொர்க்க வாசல் நடை திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் பரமபத வாசல் (சொர்க்க வாசல்) வழியாக எழுந்தருளினார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.விழாவில் பங்கேற்ற பக்தர்கள் சானிடைசர் மூலம் கைகள் சுத்தம் செய்து, முக கவசத்துடன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோதண்டராமன், செயலர் நரசிம்மன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.