பதிவு செய்த நாள்
26
டிச
2020
04:12
ஈரோடு: பெருமாள் கோவில்களில், சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு, நேற்று கோலாகலமாக நடந்தது. கொரோனா கட்டுப்பாட்டால், திறப்பு நிகழ்வில், பக்தர்களை அனுமதிக்கவில்லை. ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், நடப்பாண்டு ஏகாதசி விழா கடந்த, 15ல் பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு நேற்று அதிகாலை, 4:45 மணிக்கு நடந்தது. காலை, 6:00 மணிக்கு பிறகே தரிசனத்துக்கு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று பரவலால், ஆன்லைனில் பதிவு செய்தவர்களை மட்டுமே அனுமதித்தனர். பரமபத வாசலை கடந்து கமலவள்ளி தாயார் மற்றும் உற்சவரை, கோவிந்தா கோஷம் முழங்க, தரிசனம் செய்து, பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
6,000 பேர் தரிசனம்: அரங்கநாதரை தரிசிக்க, ஆன்லைனில், 6,000 பேர் பதிவு செய்தனர். இதில், சிறப்பு தரிசனத்தில் மட்டும், 1,700 பேர் தரிசித்தனர். இரவு, 8:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரையிலும் சொர்க்கவாசல் வழியாக, பக்தர்கள் தரிசிக்கலாம் என்று, கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன் தெரிவித்தார்.
* சென்னிமலையை அடுத்த மேலப்பாளையம், ஆதிநாராயண பெருமாள் கோவிலில், அதிகாலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சொர்க்கவாசல் வழியாக உற்சவர் வந்தார். இதையடுத்து சிறப்பு பூஜை நடந்தது. அலர்மேலு மங்கைநாச்சியார் அம்மையுடன், ஆதிநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதேபோல் முருங்கத்தொழுவு, உப்பிலிபாளையம் அருகேயுள்ள அணிரங்கபெருமாள் கோவில், சென்னிமலை ஏகாந்த வெங்கடேச பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு பூஜை நடந்தது. இவற்றில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* பவானி, சங்கமேஸ்வரர் கோவிலில், ஆதிகேசவ பெருமாள், அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக தரிசனம் தந்தார். கொரோனா கட்டுப்பாட்டால், காலை, 7:00 மணிக்கு பிறகு, தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
* அந்தியூர் பேட்டை பெருமாள் கோவில், அம்மாபேட்டை, ஆப்பக்கூடல் பகுதி பெருமாள் கோவில்களில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கலெக்டர் உத்தரவுக்கு டாட்டா: ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பிலும், மூலவரை தரிசனம் செய்யவும் அனுமதியில்லை என்று, கலெக்டர் அறிவித்திருந்தார். ஆனால், கோவிலுக்குள் கூட்டம் அலைமோதியது. பெருமாள் சொர்க்கவாசலை கடந்த பின், மூலவர் சன்னதி திறக்கப்படும் கதவுக்கு முன், நூற்றுக்கும் மேற்பட்டோர் முட்டி மோதிக் கொண்டிருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் தவித்துப்போயினர். கதவின் முன் நெருக்கடி அதிகமானதால், ஜி.ஹெச்., எஸ்.ஐ., ரவி, அங்கிருந்தவர்களை சத்தம் போட்டு வெளியேற்றினார். அங்கு வந்த கோவில் பணியாளர் அவர்கள் வி.ஐ.பி.,கள் அவர்களை விரட்டாதீர்கள் என்றார். இதனால் எஸ்.ஐ., அங்கிருந்து சென்று விட்டார். அதன் பின் கதவு திறக்கப்பட்டு வி.ஐ.பி.,க்கள் அனுமதிக்கப்பட்டனர். விழாவில், 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற, கலெக்டரின் உத்தரவு, கொரோனா கட்டுப்பாடு காற்றில் பறந்தது. குறிப்பாக கோவிலுக்கு கைங்கர்யம் செய்கிறோம் என்ற பெயரில், சிறப்பு பணியாளர் பாஸ்களை பெற்ற பலர், தங்களுக்கு வேண்டியவர்களை தரிசனத்துக்கு அழைத்து சென்றனர்.