பதிவு செய்த நாள்
26
ஏப்
2021
06:04
திருத்தணி - முருகன் கோவில் உட்பட, 29 கோவில்களில், இன்று முதல் இம்மாதம், 30ம் தேதி வரை, பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், திருமண நடத்திக் கொள்ளலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.கொரோனா தொற்று பரவல் தடுக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களில், இன்று முதல் இம்மாதம், 30ம் தேதி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கோவில் ஊழியர்கள் உதவியுடன், தினசரி நித்ய பூஜைகள் நடைபெறும் என, அரசு அறிவித்திருந்தது.இந்நிலையில், திருத்தணி முருகன் கோவில், அதன் உபகோவில்களான, 29 கோவில்களில், இன்று முதல், அரசு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை என, தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பக்தர்கள் தரிசனத்திற்கு, வரும், 30ம் தேதி வரை அனுமதியில்லை. நித்ய பூஜைகள் தினசரி நடக்கும். அதுவரை, அரசு அறிவிக்கும் நடைமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.திருமணம் செய்வதற்கு, ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள், கோவில் வளாகத்தில், 20 நபர்களுடன் திருமணம் நடத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில் திருமணத்திற்கு வந்தவர்கள், தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.இதே நடைமுறை, 29 உபகோவில்களில் கடைப்பிடிக்கப்படும். பக்தர்கள், தேவையின்றி மலைக்கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். அரசின் மறுஉத்தரவு வரும் வரை, கோவில்களில் பக்தர்கள் தரிசனம் கிடையாது.இவ்வாறு, அவர் கூறினார்.