கோவில்பாளையம்: கோவில் கிணற்றில் குப்பைகள் கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது. கீரணத்தம் ஊராட்சி, லட்சுமி கார்டன் பகுதியில், குரும்பபாளையம், மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 70 அடி ஆழ கிணறு உள்ளது. இக்கிணறு பயன்பாட்டில் இல்லை. கிணற்றிலும், கிணற்றை ஒட்டி கோவிலுக்கு சொந்தமான இடத்திலும், தனியார் நிறுவனங்கள் மற்றும் கீரணத்தம் ஊராட்சி சார்பில் குப்பைகள், கோழி கழிவு கொட்டப்படுகிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. நிலத்தடி நீர்மட்டம் மாசுபடுகிறது என அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ’கோவில் இடத்தில் குப்பைகள் கொட்டாமல் தடுக்க, எஸ்.எஸ்.குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கீரணத்தம் ஊராட்சி தலைவர் ராசு கூறுகையில், ‘ஊராட்சி சார்பில், அங்கு கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டு விட்டன‘ என்றார்.