காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணன்காந்தேஸ்வரர் கோவில் குளத்தை, உழவாரப் பணி சிவனடியார்கள் நேற்று சுத்தம் செய்தனர்.
அக்குளத்தில் தனியார் அரிசி ஆலை கழிவு நீர் விடுவதை தடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காஞ்சிபுரம், பஞ்சுப்பேட்டை பகுதியில் பழமையான பாடல் பெற்ற தலமாக விளங்கி வரும் ஓணன்காந்தேஸ்வரர் கோவில் உள்ளது. அருகில் கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது.இந்த குளம் புதர் மண்டி இருந்தது. சென்னையை சேர்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் உழவாரப் பணி குழுவினர், நேற்று, சுத்தம் செய்தனர்.இது குறித்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் உழவாரப் பணி ஒருங்கிணைப்பாளர் சிவசத்யபாபு கூறியதாவது:தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று உழவாரப் பணி செய்திருக்கிறோம். காஞ்சிபுரம் ஓணன்காந்தேஸ்வரர் கோவிலில் நேற்று மேற்கொண்ட உழவாரப் பணி, 136வது ஆகும். ஓணன்காந்தேஸ்வரர் கோவில் குளம் சுத்தம் செய்யும் போது, அருகில் உள்ள தனியார் அரிசி ஆலை கழிவு நீர் குளத்தில் நேற்று விடப்பட்டது.கழிவு நீர் கலப்பதை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.