வேதகால முதலே விநாயகர் வழிபாடு நம்மிடம் உள்ளது. பழமையான ரிக் வேதத்தின் மூன்றாம் மண்டலத்தில் ‘கணபதீம்’ என்னும் குறிப்பு உள்ளது. ‘ஜ்யேஷ்ட ராஜன்’ என்ற பெயரும் உண்டு. ‘முதலில் பிறந்தவன்’ என்பது இதன் பொருள். பார்க்கவ புராணத்தின் லீலா காண்டத்தில் விநாயகர் திருவிளையாடல்கள் இடம் பெற்றுள்ளன. தைத்ரீய ஆரண்யகம் விநாயகரை ‘தந்தி’ எனக் குறிப்பிடுகிறது. ‘தந்தம் உடையவர்’ என்பது இதன் பொருள். புத்த, சமண மதங்களிலும் விநாயகர் வழிபாடு இருக்கிறது.