மேட்டுப்பாளையம்: காரமடை அடுத்த மருதூரில் அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை விழா நடந்தது.
மருதூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அனுமந்தராய சுவாமி கோவிலில், ஜெயமங்கள ஆஞ்சநேயர், நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் சனிக்கிழமையில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் ஜெயமங்கள ஆஞ்சநேயர் சுவாமிக்கு, திருமண் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கொரோனா பேரிடர் காரணமாக, தமிழக அரசின் உத்தரவுக்கு இணங்க, பக்தர்கள் யாரும் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் பூஜைகள் மட்டுமே நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.