தீப ஒளியில் ஞானம் மலரட்டும்... இறையருளில் உலகம் திளைக்கட்டும்!;ஆன்மிக சான்றோர்கள் அருளாசி
பதிவு செய்த நாள்
07
நவ 2026 04:11
திருப்பூர்: ‘‘அஞ்ஞானத்தை விலக்கி, ஞானச்சுடர் ஒளியை பரப்பும் வகையில், தீபாவளி பண்டிகையை தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும்’’ என, ஆன்மிக சான்றோர்கள் அருளாசி வழங்கியுள்ளனர். அனைவருக்கும் பொதுவான, நாடு முழுவதும் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை தீபாவளி. ஒவ்வொரு நபரின் வாழ்வில், மறக்க முடியாத நினைவுகளை சுமந்து வருவது தீபாவளி மட்டுமே. குறிப்பாக, ஆண்டு முழுவதும் உழைக்கும் தொழிலாளர்கள், கைநிறைய போனஸ் வாங்கி, குடும்பத்துடன் குதுாகலமாக கொண்டாடுவது தீபாவளி பண்டிகை மட்டுமே. இருளை நீக்கி இன்பமாக ஒளியை நல்கும் நாளாகிய தீபாவளியே, சிறப்பான பண்டிகையென, பிற மதத்தை சார்ந்தவர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். அவ்வகையில், நாளை வரும் தீபாவளி என்பது, அஞ்ஞானத்தை விலக்கி அறிவுச்சுடராகிய பிரகாசத்தை அருளும் நன்னாளாக இருக்குமென, ஆன்மிக பெரியோர்கள் அருளாசி வழங்கியுள்ளனர். காமாட்சிதாச சுவாமி, வாகீசர் மடாலயம், அவிநாசி: உலகில் அன்பும், சகோதரத்துவம், மனிதாபிமானம், ஒற்றுமை, வளர்ச்சி ஓங்கவும், அமைதியும், ஸ்திரத்துடன் கூடிய செயல்கள் முன்னேறவும், இறையருள் துணை நிற்க வேண்டுகிறேன். தீபாவளி நாளில் அதிக அகல் விளக்குகளை ஏற்றி வைப்பதால், தீப வெளி என்பது, தீபாவளி என்கிறோம். நம்முள் இருக்கும் இருள் எனும் அஞ்ஞானத்தை விலக்கி, அறிவாகிய சுடரை ஒளிரவிடும் நாளாகும். பூமித்தாயின் புதல்வனாம் நரகாசுரனை அழித்த நாள் என்பதால், அரக்கத்தனத்தை நீக்கி மாசில்லா பண்டிகையை கொண்டாடி மகிழ வேண்டும். பூமியையும், பஞ்ச பூதங்களும், துாய்மையாக வைத்து, தீபாவளியை கொண்டாட வேண்டும். ஸ்ரீநடராஜ சுவாமிகள், கூனம்பட்டி திருமடம்: எல்லோரும் இன்புற்று இருப்பது அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என்ற தாயுமானவர் வாக்கிற்கு ஏற்ப, அனைவருக்கும் தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியாக அமையும். கோபதாபம், பகைமை தவிர்த்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும். தீப ஒளி திருநாள், அனைவரின் வாழ்விலும் உடல்நலம், உள்ளப்பிணிகளை போக்கு, சமுதாயம் ஒன்றுபட்டு வாழ வாழ்த்துகிறோம். அஞ்ஞானத்தை விலக்கி, அறிவாகிய சுடர் ஒளியாக சுடர்விடும் நாளாகிய தீபாவளி பண்டிகையை தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும். ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம்: தீபாவளி திருநாள் என்பது, இருளை அகற்றி, ஒளியை ஏற்றும் நன்னாள். அறியாமை எனும் இருளை அகற்றி, ஞானம் எனும் ஒளியை நம் உள்ளங்களில் ஏற்றுவோம். அன்பு, கருணை, பொறுமை, ஒற்றுமை ஆகிய நற்பண்புகளை வாழ்வில் கடைபிடிப்போம். இறைவன் திருவருளால், அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சியும், மனநிறைவும் பெருகட்டும். குடும்பங்களில் ஒற்றுமையும், உறவுகளின் அன்பும் நிலைத்திருக்கும். உலகம் முழுவதும் அமைதியும், சகோதரத்துவமும் நிலவட்டும். நமது பாரம்பரியமும், பண்பாடும் அடுத்த தலைமுறைக்கு சிறப்புடன் தொடரட்டும். இறைவழிபாட்டுடன் இந்நாளை கொண்டாடி இறையருளை பெறுவோம். முத்து சிவராமசாமி அடிகள், செஞ்சேரிமலை ஆதீனம்: மனித குலத்தில் எந்த பாகுபாடின்றி தீபாவளி பண்டிகையை அனைவரும் கொண்டாடுகின்றனர். தீபாவளி என்பது, அஞ்ஞான இருளை அகற்றி, ஞானச்சுடர் ஏற்றும் தத்துவம். திருவாசகத்தில், மாணிக்கவாசகர், ‘மறைந்திட மூடிய மாய இருளை, அறம் பாவம் எனும் அருங்கயிற்றால் கட்டி’ என்று கூறுகிறார். அதன்படி, மனதில் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞான சுடர் ஏற்றுவதே தீபாவளி பண்டிகையின் தத்துவம். புத்தாடை, இனிப்பு, பட்டாசு கொண்டாட்டம் என்று மட்டும் இருந்துவிடாமல், மனதில் உள்ள இருள் நீங்கி அருள் கிடைக்கும் வழிபாடுகளை இந்நன்னாளில் செய்ய வேண்டும். சுந்தரமூர்த்தி சிவம், ஸ்ரீஸ்ரீகுரு குல வேதாகம மஹா பாடசாலை முதல்வர், பெங்களூரு: பாரத தேசத்தின் சிறப்பு, கலாச்சாரம் மற்றும் பண்டிகைகளை ஆதாரமாக கொண்டுள்ளது. புராண காலத்தில் இருந்தே, தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி நாளில், எண்ணெயில் லட்சுமியும், தண்ணீரில் கங்கையும் வருவதாகவும் ஐ தீகம். அதற்காகவே, தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை பகிர்ந்து கொண்டாடுகிறோம். தீபாவளி பண்டிகையை, உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்களால் கொண்டாடப்படகிறது. அனைத்து மக்களும், அறியாமை எனும் மாயையில் இருந்து விடுபட்டு, அனைவரும், அனைத்து வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
|