அன்று காஞ்சி மஹாபெரியவரை தரிசிக்க ஏராளமானோர் காத்திருந்தனர். அங்கு எட்டு வயது சிறுமி ஒருத்தி பெற்றோருடன் நின்றிருந்தாள். அவளுக்கு முன்பாக சங்கீத வித்வான் ஒருவரும் இருந்தார். சுறுசுறுப்பான அந்த சிறுமி கலகலப்பாக பேசி அனைவரையும் கவர்ந்தாள். ‘‘நீங்கள் எதற்காக சுவாமிகளை தரிசிக்க வந்தீர்கள்’’ என வித்வானிடம் கேட்டாள் சிறுமி. ‘‘நான் ஒரு சங்கீத வித்வான். சுவாமிகள் அனுமதித்தால் பாட்டு பாடலாம் என்று இங்கு வந்திருக்கிறேன்’’ என்றார் அவர். ‘‘எனக்கும் பாடத் தெரியும்’’ என்றாள் சிறுமி. ‘‘நல்லது’’ என்றார் வித்வான். அதற்குள் வரிசை நகர்ந்து வித்வானின் முறை வந்து விட்டது. வணங்கிய அவர் மஹாபெரியவரின் முன்னிலையில் கீர்த்தனை ஒன்றை பாட விரும்புவதாக வேண்டுகோள் விடுத்தார். ‘பாடுங்களேன்’ என்றார் மஹாபெரியவர். கீர்த்தனையைப் பாடி பிரசாதம் பெற்றுச் சென்றார். அடுத்ததாக பெற்றோருடன் வந்த சிறுமி நின்றிருந்தாள். ‘நானும் சுவாமிகள் முன்னிலையில் பாடுவேன்` என பிடிவாதம் செய்தாள். ஆனால் பெற்றோர் அவளை அதட்டினர். ‘என்ன வேண்டுமாம் இவளுக்கு’ என்று காஞ்சி மஹாபெரியவர் விசாரித்த போது, ‘சுவாமிகள் முன்னிலையில் பாடுவேன் என்கிறாள்’ என தெரிவித்தார் சிறுமியின் தந்தை. ‘அவ்வளவு தானே... நீயும் ஒரு பாட்டுப் பாடேன்...கேட்கலாம்’’ என்றார் மஹாபெரியவர். சிறுமியும் கணீர் குரலில் பாடத் தொடங்கினாள். அதைக் கேட்ட பெற்றோர் திகைத்தனர். காரணம் அவள் கீர்த்தனையோ, கடவுளைப் பற்றிய பாடலோ பாடவில்லை. ‘துாங்காதே தம்பி துாங்காதே நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே’ என்னும் சினிமா பாடலைப் பாடினாள். ‘ இந்த பாட்டெல்லாம் பாடக் கூடாது’ என்று சிறுமியின் வாயைப் பெற்றோர் பொத்தினர். ‘அவள் ஆர்வத்தோடு பாடுகிறாள். முழுப்பாட்டையும் பாடட்டும்...தடுக்காதீர்கள்’’ என்றார் மஹாபெரியவர். சிறுமியும் உற்சாகமாக பாடி முடித்தாள். ‘நாட்கள் முழுவதையும் துாங்கிக் கழித்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தாமும் கெட்டார், சிலர் அல்லும் பகலும் வெறும் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்’ போன்ற கருத்தாழம் மிக்க வரிகளை ரசித்துக் கேட்டார். ‘சினிமாப் பாட்டிலும் நல்ல புத்திமதி எல்லாம் சொல்கிறார்களே’ என பாராட்டினார். ‘அதிகம் துாங்காமல் உழைத்து முன்னேற வேண்டும்’ என்று சிறுமியிடம் கூறி ஆசி வழங்கினார்.