பாற்கடலில் பாம்பணையில் மகாவிஷ்ணு பள்ளி கொண்டிருந்தார். அவரது திருவடியில் மகாலட்சுமியும், பூமிதேவியும் அமர்ந்திருந்தனர். அப்போது அவர் பூமியில் தர்மத்தை நிலைநிறுத்த அர்ச்சாவதாரமாக (வழிபடத்தக்க சிலை வடிவம்) செல்ல இருப்பதாகவும், தன்னுடன் மகாலட்சுமியும் வருமாறு அழைத்தார். ‘‘ ராம அவதார காலத்தில் சீதையாக அவதரித்து நான் பட்டபாடு போதும் சுவாமி...இப்போது எந்த ராவணனிடத்தில் என்னை ஒப்படைத்து துன்பப்படுத்தப் போகிறீர்களோ’’ என்று சொல்லி கோபித்தாள். அதன்பின் மகாவிஷ்ணுவின் பார்வை பூமிதேவியின் பக்கம் திரும்பியது. மறுப்பேதும் சொல்லாமல் சம்மதம் தெரிவித்தாள். அவளே ஆண்டாள் என்னும் பெயரில் ஸ்ரீவில்லிபுத்துாரில் அவதாரம் செய்தாள். அந்த கோதை ஆண்டாளின் இயல்பான ‘பொறுமை’ என்னும் குணத்தை கடைபிடித்தால் நம் வாழ்வு சிறக்கும்.