பதிவு செய்த நாள்
10
நவ
2021
04:11
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நிறைவாக, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த, 5ம் தேதி காப்பு கட்டுதலுடன், கந்த சஷ்டி விழா துவங்கியது. கொரோனா தொற்று காரணமாக, சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நடக்கும் நாட்களில், கோவிலில் பக்தர்கள் யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடந்தது. கந்தசஷ்டி விழாவின் இறுதி நாளான இன்று அதிகாலை, 5:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது. அதிகாலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணியசுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். அதனை தொடர்ந்து காலை, 10:15 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடந்தது. அதன்பின், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி பல்லக்கில் திருவீதி உலா வந்தார். மொய் பணமாக, 8,212 ரூபாய் வசூலானது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, கோவிலில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.