பதிவு செய்த நாள்
07
டிச
2021
03:12
லக்னோ : உத்தர பிரதேசத்தின் ஷியா வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவரான வாசிம் ரிஸ்வி நேற்று ஹிந்து மதத்திற்கு மாறினார்.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 1995 முதல் 2020 வரை மாநில ஷியா வக்பு வாரியத்தின் தலைவராக பதவி வகித்தவர் வாசிம் ரிஸ்வி.முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரான இவர், சமீபத்தில் மதம் தொடர்பாக கூறிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
கடந்த மாதம் இவர் வெளியிட்ட ’முகமது’ என்ற புத்தகத்தின் அட்டைப் பக்கத்தில் ஆபாசமான முறையில் பெண் நிற்பது போன்ற படம் இடம்பிடித்திருந்தது. அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில், தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த வாசிம் ரிஸ்வி, நேற்று ஹிந்து மதத்திற்கு மாறினார். காஸியாபாத் மாவட்டத்தில் உள்ள தாஸ்னா தேவி கோவிலுக்கு நேற்று காலை வாசிம் சென்றார். அங்கு, தலைமை பூஜாரி நரசிங்காநந்த் சரஸ்வதி முன்னிலையில் சிறப்பு யாகம் நடந்தது.பின், இஸ்லாம் மதத்தில் இருந்து விலகி, ஹிந்து மதத்திற்கு மாறினார். தன் பெயரை ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி என்றும் மாற்றிக் கொண்டார். செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”கடந்த, 1992ம் ஆண்டு, இதே நாளில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதே நாளில், நான் தற்போது ஹிந்து மதத்தில் இணைந்துள்ளேன். இனி ஹிந்து மதத்திற்காக உழைப்பேன்,” என்றார்.