சேத்துப்பட்டு : திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கெங்காபுரம் கிராமத்தில் உள்ள செய்யாற்றில், கங்காபுரம் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன், குப்பன் ஆகியோர் வலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பழமை வாய்ந்த கல்லாலான விநாயகர் சிலை சிக்கியது. இத்தகவல் அப்பகுதி மக்களிடையே பரவியதை அடுத்து, சிலையை காண கூட்டமாக கூடினர். பின்னர், அப்பகுதியிலுள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்தனர். தகவலறிந்த சேத்துப்பட்டு தாசில்தார், சம்பவ இடத்திற்கு வந்து விநாயகர் சிலையை மீட்டு, சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். அங்கு சிலை பாதுகாப்பாக உள்ளது.