தில்லைவாழ் அந்தணர்களில் ஒருவர் உமாபதி சிவாச்சாரியார். செல்வாக்கு மிக்க இவர் ஒருநாள் அவர் சிதம்பரம் நடராஜருக்கு பூஜை செய்து விட்டு பல்லக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பல்லக்கின் முன் பணியாளர்கள் தீவட்டி பிடித்தபடி சென்றனர். இப்படி தீவட்டி பிடிப்பது அக்கால நடைமுறை. ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த மறைஞான சம்பந்தர் என்பவர் இதைக் கண்டதும் சிரித்து விட்டார். உமாபதி சிவாச்சாரியாரின் காதில் விழும்படி, “பட்ட மரத்தில் பகல் குருடு போவதைப் பார்’ என்றும் கத்தினார். பட்டமரம் என்பது பல்லக்கையும், பகல் குருடு என்பது பகல் நேரத்தில் பல்லக்கின் முன் தீவட்டி பிடித்துச் செல்வதையும் குறிப்பால் உணர்த்தினார். கற்பூரத்தில் பற்றிய நெருப்பு போல உமாபதியின் மனதில் ஞானம் உண்டானது. பல்லக்கில் இருந்து குதித்த உமாபதி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தரின் காலில் விழுந்தார். “சுவாமி! அடியேனை மாணவராக ஏற்க வேண்டும்” என வேண்டினார். ஏதும் பேசாமல் மறைஞான சம்பந்தர் எழுந்து வீதியில் நடக்கத் தொடங்கினார். உமாபதி சிவாச்சசாரியாரும் பின்தொடர்ந்தார். செல்லும் வழியில் மறைஞான சம்பந்தர், ஒரு வீட்டின் வாசலில் நின்று பிச்சை கேட்டார். அந்த வீட்டார் அளித்த கூழைச் ‘சிவ பிரசாதம்’ என கைகளில் ஊற்றச் சொல்லிக் குடித்தார். அப்போது அவரது கைகளில் இருந்து கீழே வழிந்த கூழை உமாபதி சிவாச்சாரியார் ‘குரு பிரசாதம்’ என்று சொல்லிக் குடித்தார். இதன் பின்னர் மறைஞான சம்பந்தர் தன் சீடராக அவரை ஏற்றுக் கொண்டார்.