பதிவு செய்த நாள்
31
ஜன
2022
06:01
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா, நாளை கொடியேற்ற நிகழ்வுடன் துவங்குகிறது.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பூமிதி விழா எனப்படும், குண்டம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு திருவிழா, நாளை, பிப்., 1ம் தேதி காலை, 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.தொடர்ந்து, 14ம் தேதி நள்ளிரவு மயான பூஜை, 15ம் தேதி காலை, 7:30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், 17ம் தேதி காலை, 9:30 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 19ம் தேதி காலை, 11:30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது.கொடியேற்ற நிகழ்ச்சிக்காக, ஆண்டுதோறும் சேத்துமடை மற்றும் சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து, கொடிக்கம்பம் கொண்டுவரப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, முறைதாரர்கள், மாசாணியம்மன் கோவில் நற்பணி மன்றத்தினர் சர்க்கார்பதி வனப்பகுதிக்கு சென்று வனத்துறை உதவியுடன், 84 அடி மூங்கில் மரம் வெட்டினர்.சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலில், கொடிக்கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட கம்பம், ஊர்வலமாக மாசாணியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. நாளை, உப்பாற்றங்கரையில் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் கொடியேற்றம் நடக்கிறது.