அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் கடற்கரையில் நேற்று மாசி மக தீர்த்தவாரி விழா நடந்தது. அரியாங்குப்பம், சின்ன வீராம்பட்டினம், தவளக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட உற்சவ சுவாமிகள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு குடிநீர், தற்காலிக கழிப்பிட வசதிகளை அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் மேற்பார்வையில் ஊழியர்கள் செய்தனர். உற்சவ சுவாமிகளை வீராம்பட்டினம் கடற்கரையில் இருந்து வழி அனுப்பும் நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., தட்சிணாமூர்த்தி பங்கேற்றார்.ஏற்பாடுகளை வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் அறங்காவலர் குழு மற்றும்மாசி மக தீர்த்தவாரி பாதுகாப்பு குழுவினர் செய்தனர். அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.