குந்தி, தன் மகன் கர்ணனை ஆற்றில் விட்டதால் ஏற்பட்ட பாவம் தீர, தவ்டிய முனிவரிடம் பிராயச்சித்தம் கேட்டாள். மாசிமகநாளில் சிவனை வழிபட்டு, ஏழு கடலில் நீராடினால் பாவம் நிவர்த்தியாகும் என்று அவர் அருள் செய்தார். தீர்த்தயாத்திரை புறப்பட்ட குந்தி, மாசிமகத்தன்று தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இருந்து 5 கி.மீ., தூரத்திலுள்ள நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபட்டு அங்குள்ள குளத்தில் நீராடினாள். சிவனருளால் ஏழுகடல் தீர்த்தமும் குளத்தில் சங்கமித்தன. அந்த குளத்துக்கு "சப்தசாகரம் என பெயர் ஏற்பட்டது. 12 படித்துறை களுடன் கூடிய குளம் இது. ஆரோக்கியம், ஐஸ்வர்யம் பெற விரும்புவோர் குளத்தை 12முறை வலம்வந்து வழிபடும் வழக்கம் உள்ளது. குந்தியின் பாவம் தீர்ந்த நன்னாளாக மாசிமகம் அமைந்துள்ளது.