அன்னூர்: வடுகபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று நடந்தது.
பச்சாபாளையம் அருகே உள்ள வடுகபாளையத்தில் பிரசித்தி பெற்ற சௌடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் துவங்கியது. மாலையில் அம்மனுக்கு கொலு வைத்தல், மகாமுனி அய்யன்களுக்கு படையல் வைத்து, விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், பேச்சி அம்மன், அங்காளம்மன் கோவிலிலிருந்து வீரமாத்தி அம்மனை அழைத்து வருதல் ஆகியவை நடந்தன. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பள்ளய பூஜையும், இதையடுத்து அபிஷேக, அலங்கார பூஜையும் நடந்தது. சேலம், திருப்பூர், கோவை பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கப்பேலார் குலத்தினர் செய்திருந்தனர்.