பதிவு செய்த நாள்
16
ஏப்
2022
06:04
தஞ்சாவூர்: தஞ்சாவூரில், நடராஜர் உலோக சிலையை, 30 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற மூன்று பேரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
தஞ்சாவூர் அருகே, மாரியம்மன் கோவில் பை - பாஸ் சாலையில், சிலை விற்பனை செய்ய சிலர் வந்துள்ளதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனை மேற்கொண்ட போது, அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து, விசாரணை நடத்தினர்.அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில், திருவாச்சியில் 21 சுடருடன், அதில் 13 சுடர் அறுத்து எடுக்கப்பட்ட நிலையில், முக்கால் அடி உயரமும், 1 கிலோ எடையும் கொண்ட நடராஜர் உலோக சிலை மறைத்து வைக்கப்பட்டுஇருந்தது தெரியவந்தது. விசாரணையில், சிலையை 30 லட்சம் ரூபாய்க்கு விற்பதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. தஞ்சாவூர் மாவட்டம், ராஜகிரியைச் சேர்ந்த பிரபாகரன், 27, பைசல் அகமது, 27, சாகுல் ஹமீது, 26, ஆகிய மூவரை கைது செய்து, நடராஜர் சிலையை பறிமுதல் செய்தனர்.கடத்தலில் தொடர்புடைய வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.