அசிக்காடு முத்துமாரியம்மன் கோவில் சித்ரா பௌர்ணமி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2022 07:04
அசிக்காடு முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அசிக்காடு கிராமத்தில் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அம்பாளை வழிபட்டால் 16 வகையான செல்வங்களும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு சித்ராபவுர்ணமி விழா கடந்த மூன்றாம் தேதி தொடங்கியது. சித்ரா பௌர்ணமியான இன்று ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, சந்தனக் காவடி, அலகு காவடி என பல்வேறு வகையான காவடிகள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபாடு நடத்தினர். மாலை வான வேடிக்கையுடன் முத்துமாரி அம்மன் வீதிஉலா காட்சி நடைபெற்றது. பூஜை அறை கோபால் சிவாச்சாரியார் மற்றும் ஆலய பூசாரி உத்திராபதி ஆகியோர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை செல்வ முத்துக்குமரன், அசிக்காடு கிராம வாசிகள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.