பதிவு செய்த நாள்
17
ஏப்
2022
07:04
திருப்பூர்,: திருப்பூர் சித்ரகுப்தர் கோவிலில் நடந்த சித்ரா பவுர்ணமி விழாவில் நேற்று திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில், காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக, திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில், சித்ரகுப்தருக்கு கோவில் உள்ளது.இங்கு, தலைப்பாகை அணிந்து, வலது கையில் எழுத்தாணியும், இடது கையில் சுவடியுடன், கணக்கு எழுதும் கோலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
சித்ரகுப்தர் கோவிலில், சித்ரா பவுர்ணமி விழா 93ம் ஆண்டாக கோலாகலமாக நடந்தது. நேற்று முன்தினம், பால்குடம் ஊர்வலம், உற்சவ மூர்த்திகள் திருவீதியுலா நடந்தன. நேற்று காலை, கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள் அருளாசி வழங்கினார்.தொடர்ந்து, யாகசாலை பூஜை, மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு, கம்பு மற்றும் தினை மாவில், தேன் கலந்து செய்த இனிப்பு பதார்த்தங்கள், பச்சரிசி ஒப்பிட்டு, மா, பலா, வாழை, இனிப்பு வகைகள் படைக்கப்பட்டன. பெண்கள், பொங்கல் வைத்து படையலிட்டு வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சித்ர குப்தரை தரிசனம் செய்தனர்.