பதிவு செய்த நாள்
05
ஜூலை
2022
04:07
சேலம்,-திருப்பதி, திருமலை சுவாமி தரிசனத்துக்கு போலி டிக்கெட் விற்று மோசடியில் ஈடுபட்டதாக, சேலத்தை சேர்ந்தவரிடம், ஆந்திர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி, திருமலை அர்ச்சனை சேவா, சுவாமி தரிசன போலி டிக்கெட்டை கொண்டு வந்த சேலத்தைச் சேர்ந்த மூன்று பேரை, கோவில் நிர்வாகம் ஜூன் 29ம் தேதி பிடித்து, ஆந்திரா டவுன் திருமலா போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து, புகார் அளித்தது.வழக்குப்பதிவு செய்த திருமலா போலீசார், போலி டிக்கெட்டுடன் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், சேலம் கடை வீதியில் சுற்றுலா ஏஜன்சி நடத்தி வருபவரிடம் டிக்கெட் பெற்றதாக தெரிவித்தனர். அதை அடுத்து, நேற்று சேலம் வந்த ஆந்திர போலீசார், சேலம் டவுன் போலீசாரின் ஒத்துழைப்புடன், சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் சந்திரன், 57, என்பவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர்.விசாரணைக்கு பின், அவரை ஆந்திர போலீசார் அழைத்துச் சென்றனர். சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுதும் உள்ள பக்தர்கள் திருமலை திருப்பதியில் தரிசனம் மேற் கொள்ள சுந்தர்ராஜன் போலி டிக்கெட் வழங்கி, மோசடியில் ஈடுபட்டது, போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.