திருவாதிரை விழாவையொட்டி வரும் 26ம் தேதி அரியலுாருக்கு உள்ளூர் விடுமுறை: கலெக்டர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2022 03:07
திருவாதிரை விழாவையொட்டி வரும் 26ம் தேதி அரியலுாருக்கு உள்ளூர் விடுமுறை: கலெக்டர் பெரம்பலூர்,ஜூலை.20- திருவாதிரை விழாவையொட்டி, வரும் 26ம் தேதி அரியலுாருக்கு உள்ளூர் விடுமுறை என கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் யுனெஸ்கோபால் உலக பிரதான பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடி திருவாதிரை விழா ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான வரும் 26ம் தேதி அரசு விழாவாக நடத்த அரசு ஆணையிடப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் அரியலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் உள்ளூர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும், அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.