பதிவு செய்த நாள்
19
ஜூலை
2022
03:07
கோவை: ஸ்ரீ ஜகத்குரு ட்ரஸ்ட் சார்பில் கோவையில் வேத பாடசாலை மற்றும் கோசாலை கட்டுமான பணிகளுக்கான மகா ருத்ரம் ஆரம்பம் ஆனது.
கோவை - சத்தி சாலையிலிருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலையில், ராஜவிக்னேஷ் நகர் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ ஜகத்குரு டிரஸ்டிற்கு சொந்தமான, 21 சென்ட் நிலம் உள்ளது. டிரஸ்ட் சார்பில் அங்கு சமூக நலக்கட்டடம், கோசாலை, வேதபாடசாலை ஆகியவை அமைய உள்ளன. இதற்கான கோபூஜை, நேற்று முன் தினம் நடந்தது. நேற்று யாகசாலை அமைக்கப்பட்டு, நவக்கிரஹ பூஜா ஹோமம், ஸ்னானம், தர்ப்பணம், நவக்கிரஹ ஹோமம் நடந்தது. யாகக்கலசங்கள் நிறுவி ஹோமங்கள் நடைபெற்றன.வாஸ்து ஹோமம், எட்டு திக்குகளிலும் சிறப்புபூஜைகளும் தொடர்ந்து பூஜாபலியும் நடைபெற்றது. திக்பால அதிபதிகள், துர்தேவதைகள் வழிபாடுகள் நடைபெற்றன.கோசாலை, வேத பாடசாலை அமைய உள்ள அந்நிலத்தில், கட்டட கட்டுமானப்பணிகளுக்கான சிலாபிரதிஷ்டை நேற்று நடந்தது. துாய்மைப்படுத்தப்பட்டசிவலிங்கத்தை போன்ற சிலைக்கு மஞ்சள் குங்குமம், சந்தனம் பூசப்பட்டு, மலர் மாலை அணிவித்து, யாககுண்டத்துக்கு முன் எழுந்தருளுவிக்கப்பட்டது. வேத பண்டிதர்கள் வேதபாராயணங்களை முழங்கினர். மங்கள இசை ஒலிக்க பூமியினுள் சிலா பிரதிஷ்டை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமத்தை தொடர்ந்து, மஹாருத்ரம் துவங்கியது. மாலை விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணமும், கிராமார்ச்சனையும் நடக்கிறது.