ஆன்மிக பூமியான நம் நாட்டில் பிறந்தவர்கள் மட்டுமே பக்தர்கள் எனக் கருத தேவையில்லை. நல்ல குருநாதரைத் தேடி பக்தியுடன் இங்கு வந்த வெளிநாட்டினரும் உண்டு. இதனால் தான் ‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரதநாடு’ ‘மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன்னாடு’ ‘பூரண ஞானம் பொலிந்த நன்னாடு’ என்றெல்லாம் மகாகவி பாரதியார் பாடினார். அந்த வகையில் இங்கு வந்த இத்தாலியப் பெண்தான் யுஜீனியா. சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் தங்கியிருந்த காஞ்சி மஹாபெரியவரைச் சந்தித்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை, ’’மெழுகில் வார்க்கப்பட்ட பொன்நிறச் சிலை போல சுவாமிகள் இருந்தார். அருகில் நின்று தரிசித்த போது கண் முன்னே தீபச்சுடர் பிரகாசிப்பதை போல பரவசம் அடைந்தேன். அவரது தோற்றம் சாதாரண மனிதரைப் போல வெறும் பவுதீக உடலாகத் தோன்றவில்லை. ஒளி மிக்க ஆன்மா குடியிருப்பதால் ஸ்படிகம் போல மேனி காட்சியளித்தது’’ என்கிறார். பயணத்தை முடித்து மறுநாள் தன் நாட்டுக்கு புறப்படத் தயாரானார் அப்பெண். அன்றிரவு மழை பெய்யவே சேற்றில் தடுமாறி விழுந்த அப்பெண்ணுக்கு விலா முதல் குதிங்கால் வரை கடும்வலி ஏற்பட்டது. பயணம் மேற்கொள்வது என்ற கவலையுடன் படுத்திருந்த போது, ‘‘தன் சிறகுகளால் அணைத்துக் கொள்வார்; அதற்குள் நீ சுகமாய் இருப்பாய்’’ என்ற வசனம் அவரது நினைவுக்கு வந்தது. பொழுது விடிந்ததும் மஹாபெரியவரை தரிசிக்க புறப்பட்டார். வலியின்றி இயல்பாக நடக்க முடிந்தது. சுவாமிகளின் முன் சப்பணமிட்டு கீழே அமர்ந்தார். தாயின் மடியில் அமர்ந்த குழந்தையாக தன்னை உணர்ந்தார். சுவாமிகளைத் தரிசிக்க பக்தர்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். சிறுவர்கள் விளையாடிக் கொண்டும், பறவைகள் சப்தமிட்டபடியும் இருந்தனர். இரைச்சல் மிக்க இந்த சூழலிலும் அப்பாலும் அடிசார்ந்த இந்த வெளிநாட்டுப் பக்தையின் மனதில் அமைதி நிலவியது. மஹா பெரியவரை சரணடைந்தால் அமைதியும், நிம்மதியும் நமக்கும் சாத்தியமானதே.