வில்லியனுார் : தொண்டமாநத்தம் பிடாரி மீனாட்சியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரி மீனாட்சியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 8ம் தேதி இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.தேர் திருவிழாவின்போது கிராமத்தில் ஒவ்வொரு வீட்டு வாசல் முன்பு சாலையில் ஆடுகளை பலியிட்டு, சிந்தும் ரத்தத்தின் மீது தேர் செல்வது இந்த கோவிலின் தனிச் சிறப்பாகும். அதன்படி கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று நள்ளிரவு 1:00 மணியளவில், கோவில் வாசலில் முதன் முதலாக 9 ஆடுகளை பலியிட்டனர். அதனை தொடர்ந்து, ஒவ்வொரு வீட்டின் வாசல் முன்பும் ஆடுகளை பலியிட்டு, அதன் ரத்தங்களை சாலையில் விட்டனர். நேற்று முன்தினம் காலை 10:30 மணியளவில் பிடாரி மீனாட்சி அம்மன் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.நேற்று பிற்பகல் 2:00 மணிக்கு மேல் தேர் மீண்டும் புறப்பாடாகி, ராமநாதபுரம் கிராமத்தில் வீதியுலா வந்தது.வரும் 22ம் தேதி இரவு 7:00 மணிக்கு மேல் அம்மனுக்கு உதிரவாய் துடைத்தல் நிகழ்ச்சி மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. குழந்தைப் பேறு இல்லாதவர்கள், இக்கோவிலில் அம்மனுக்கு படையலிட்ட ரத்தசோறு சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.