புவனகிரி: புவனகிரி ஆட்டுத்தொட்டி வீதி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஆடி மாத செடல் மற்றும் தீமிதி உற்சவம் நடந்தது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி விழா வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இரண்டு ஆண்டுகள் திருவிழா தடைபட்டது. தற்போது 12 ஆம் ஆண்டு விழா வை முன்னிட்டு கடந்த 11ம் தேதி வாஸ்து சாந்தி, மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் கொடியேற்றி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. 12 ஆம் தேதி சாக ஊற்றுதலுடன், தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று வெற்றாற்றில் இருந்து சக்திகரகம், செடல் புறப்பட்டு கோவிலில் வந்து அடைந்தது. மாலையில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. சுற்று பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு சுவாமி வீதி உலா காட்சி நடந்தது. சிதம்பரம் டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.