பதிவு செய்த நாள்
27
அக்
2022
02:10
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் கோலாகலமாக துவங்கியது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் வைகாசி விசாகம், தைப்பூசம், கந்த சஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்நிலையில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் நேற்று கோலாகலமாக துவங்கியது. நேற்று அதிகாலை, 5:15 மணிக்கு, கோபூஜையுடன் நடை திறக்கப்பட்டது. அதிகாலை, 5:30 மணிக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, பாலசுப்பிரமணியர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை, 7:00 மணிக்கு, விநாயகர் பூஜை, புண்யாகம், பஞ்சகவ்யம், இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல், யாகசாலை பூஜை நடந்தது. காலை 9:10 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, சுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, காலசந்தி பூஜையும் நடந்தது. அதன்பின், விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. காலை, 9:15 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, வேடன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பகல், 12:30 மணிக்கு, உச்சிக்கால பூஜை நடந்தது. உற்சவமூர்த்தியான, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, தங்க யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கந்த சஷ்டி துவக்க விழாவையொட்டி, நேற்று ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமியை தரிசனம் செய்தனர். வரும், 30ம் தேதியும், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரமும், 31ஆம் தேதி, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. காந்திபார்க்கில் உள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 6:00 மணிக்கு, பாலதண்டாயுதபாணி சுவாமி, திருச்செந்தூர் முருகன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை, 6:45 மணிக்கு, பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு, காப்பு கட்டி, கந்த சஷ்டி விழா துவங்கியது. அதனைத்தொடர்ந்து, விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.