பதிவு செய்த நாள்
01
செப்
2012
11:09
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஏத்தாப்பூரில், ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த தேர்த்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஏத்தாப்பூர் கிராமத்தில், பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன், பிடாரி மாரியம்மன், புது மாரியம்மன் ஸ்வாமி கோவில்கள் உள்ளன. இக்கோவிலில், ஏழு ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த, 14ம் தேதி, பிராமண குல சமுதாயத்தினர் சார்பில், பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன், தேர்த்திருவிழா துவங்கியது. கடந்த, 28ம் தேதி, பெரிய மாரியம்மன், பிடாரி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், சர்க்கரை பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று, பெரிய மாரியம்மன், பிடாரி அம்மன், புது மாரியம்மன் ஸ்வாமிகள், அலங்கரிக்கப்பட்ட தேரில், முக்கிய வீதி வழியாக பவனி வந்தனர். அப்போது, பக்தர்கள் ஏராளமானோர் அலகு குத்தி, நேர்த்திக் கடன் செலுத்தினர்.விழாவில், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், புத்திரகவுண்டன்பாளையம், வாழப்பாடி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.