கிருதயுகத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான் முரன் எனும் அசுரன். இதனால் கஷ்டப்பட்டவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவரோ திருமாலிடம் சரண்புகுமாறு அறிவுறுத்தினார். இப்படி இவர்கள் திருமாலிடம் சரணடையவே, அவர் அசுரனுடன் போரிடத் துவங்கினார். இறுதியில் அசுரனது படைக்கலன்களை எல்லாம் அழித்தார். பின் அவன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று எண்ணினார் திருமால். அதன்படி போர்க்களத்தில் இருந்து வெளியேறி, பத்ரிகாஸ்ரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் ஓய்வெடுத்தார். அப்போதும் அவன் திருந்தவில்லை. மனம் வருந்தவில்லை. பகவானைக் கொல்ல குகைக்கே வந்துவிட்டான். பாவம்! அவன். மாயங்கள் செய்வதில் வல்லவரான திருமால், உறங்குவதாக நினைத்து வாளை ஓங்கினான். அப்போது திருமாலின் சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இந்த சக்தியை சாதாரணமாக நினைத்த அசுரன், ‘உன்னைக் கொல்ல ஓர் அம்பே போதும்’ என்று அம்பை எடுத்தான். அப்போது அந்தப் பெண் எழுப்பிய ஒலியால், அசுரன் சாம்பலாகினான். அதே நேரத்தில் ஏதுமறியாதவர்போல் கண்விழித்த பகவான், அந்த சக்தியை பாராட்டினார். அதோடு அவளுக்கு ஏகாதசி என்ற பெயரை சூட்டி, ‘‘நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, வைகுண்ட பதவியையும் கொடுப்பேன்’’ என்று அருளினார்.