நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கூத்தாண்டவர் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2023 03:01
அன்னூர்: அன்னூரில் 300 ஆண்டுகள் பழமையான கூத்தாண்டவர் கோவிலில் திருவிழா துவங்கியது.
அரவான் சூரியனிடமிருந்து முழுமையான சக்தியை பெற்றவர். சிவபெருமானுக்கு இணையாக நடனமாடியதால் கூத்தாண்டவர் என பெயர் பெற்றவர். அன்னூரில் 300 ஆண்டுகளாக கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த திருவிழா கொரோனா பாதிப்பு காரணமாக நான்காண்டுகள் கழித்து தற்போது நடைபெறுகிறது. கடந்த 3ம் தேதி குன்னத்தூராம் பாளையத்திலிருந்து அணிக்கூடை எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. கூத்தாண்டவர் கோவிலில் கணபதி ஹோமத்துடன் பூச்சாட்டு துவங்கியது. நேற்று முன்தினம் காலையில் கம்பம் வெட்டச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 9:00 மணிக்கு மன்னீஸ்வரர் கோவிலில் இருந்து கூத்தாண்டவர் கோவிலுக்கு கம்பம் எடுத்து வருதல் மற்றும் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான மக்கள் கம்பத்தில் உப்பு தூவி வழிபட்டனர், குன்னத்தூராம் பாளையம், நாகமாபுதூர், அன்னூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கம்பம் சுற்றி ஜமாப் இசைக்கு ஆடிய படி வழிபாடு செய்தனர். வருகிற 16ம் தேதி வரை தினமும் இரவு கம்பம் சுற்றி ஆடுதல் மற்றும் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 17, 18 மற்றும் 19 ம் தேதி மூன்று நாட்களும் மாவிளக்கு ஊர்வலம், அரவான் எழுந்தருளுதல், கலை நிகழ்ச்சி திருக்கல்யாணம் மற்றும் திருவீதி உலா நடைபெறுகிறது. 20ம் தேதி திருவிழா நிறைவு பெறுகிறது.